

புதுடெல்லி: கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.862 கோடி நிதியுதவியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக இமாச்சல பிரதேசத்தில் கனமழைபெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக மத்திய அரசு நிதியுதவி வழங்கவேண்டும் என்று இமாச்சல பிரதேச முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிம்லா, சிர்மவுர், பிலாஸ்பூர், தரம்பூர், சுஜன்பூர் பகுதிகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு விரைவில் முடிவடையும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கனமழையால் பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.2,700 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாக ரூ.862 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதேபோல், மழையால் பாதிப்படைந்த வீடுகளை புதிதாக கட்டவும், சீரமைக்கவும் நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.