

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து நேற்று அதிகாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டன. பல வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன.
ரஜோரி நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது.
கனமழை காரணமாக, ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளையும் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் செனாப் நதியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நிலைமை சீராகும் வரை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடித்தல், குளித்தல், கால்நடைகளை மேய்த்தல் அல்லது நதியைக் கடக்க முயற்சிப்பதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
துணை நிலை ஆளுநர் ஆய்வு:
கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் நிலைமை குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆய்வு செய்தார். முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் கூறும்போது, ”மக்களின் உயிரைப் பாதுகாப்பதே நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என அவர் உறுதியளித்தார். இதற்கிடையில், ஞாயிற்றுக் கிழமை பகல் காம் மற்றும் பல்தால் ஆகிய இரு வழிகளிலும் அமர்நாத் யாத்திரையை நிர்வாகம் நிறுத்தியது.
நாகாலாந்தில் 8 பேர் உயிரிழப்பு: வடகிழக்கு மாநிலமான நாகாலாந்திலும் நேற்று கனமழை பெய்தது. இதனால் மோன் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இது குறித்து மோன் மாவட்ட துணை ஆணையர் வென்யே கொன்யாக் கூறும்போது, ”வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.4 லட்சம் நிவாரணம்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.74 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்துத் துறைகளும் தீவிரக் கண்காணிப்பில் இருக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நதிக்கரைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்குச் செல்வதைத் மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.