மக்களவையில் ‘பறக்கும் முத்தம்’ சர்ச்சை முதல் ராகுல் Vs ஸ்மிருதி இரானி வரை | செய்தி தெறிப்புகள் 10 @ ஆக.9, 2023

மக்களவையில் ‘பறக்கும் முத்தம்’ சர்ச்சை முதல் ராகுல் Vs ஸ்மிருதி இரானி வரை | செய்தி தெறிப்புகள் 10 @ ஆக.9, 2023
Updated on
3 min read

நாட்டையே எரிக்க முயல்கிறீர்கள்: மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்: மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதம் புதன்கிழமை நடந்தது. அதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசும்போது, “நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலம் என்பது இந்தியாவின் பகுதியாக இல்லை. மணிப்பூரை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொலை செய்துள்ளீர்கள். இந்தியா என்பது நமது மக்களின் குரல்.

நீங்கள் மணிப்பூரில் அந்தக் குரலைக் கொலை செய்துள்ளீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தியாவைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் துரோகிகள்... தேச பக்தர்கள் அல்ல. நீங்கள் மொத்த நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்று ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசினார்.

நீங்கள் இந்தியா கிடையாது: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி: “பாரத மாதா இறந்துவிட்டார் என்கிறீர்களா?” என்று மக்களவையில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். மேலும், ராகுல் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், “நீங்கள் இந்தியா கிடையாது” என்றார்.

“நீங்கள் இந்தியா கிடையாது. இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை. இந்தியா தகுதியை நம்புகிறது; வாரிசு அரசியலை அல்ல. நாடு சுதந்திரம் அடையும் முன் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை நாடு முழங்கியது. இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நாடு, ஊழலே இந்தியாவைவிட்டு வெளியேறு என்கிறது; வாரிசு அரசியலே நாட்டை விட்டு வெளியேறு என்கிறது. தகுதியைத்தான் இந்தியா கோருகிறது” என்று கூறினார்.

‘பறக்கும் முத்தம்’ சர்ச்சை: பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்வரிசையில் இருந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தவறாக நடந்து கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 20-க்கும் மேற்பட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ புகாரில், 'அவையில் ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அநாகரிகமாக நடந்து கொண்டார். அவரது இந்த நடவடிக்கை பெண் எம்.பி.க்களை அவமதித்த செயல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கும் எதிரானது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே, "அவையில் ஓர் உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டது இதுதான் முதல்முறை. பெண் எம்.பி.க்களைப் பார்த்து அவர் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

இது குறித்து பேசிய மற்றொரு பெண் அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், "அவையை விட்டு வெளியே செல்லும்போது அவர் (ராகுல் காந்தி) ஃபிளையிங் கிஸ் கொடுத்ததை நாங்கள் விரும்பவில்லை. இது நமது கலாசாரம் அல்ல. நாடாளுமன்றத்தில் இதுபோன்று நடப்பதை சகித்துக்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டார்.

ஸ்மிருதி இரானிக்கு 'ராகுல் போபியா' - மாணிக்கம் தாகூர் விமர்சனம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ‘ஃராகுல் ஃபோபியா' இருக்கிறது என்றும், அதனால்தான் பறக்கும் முத்தம் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: “பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் சாடினார்.

'கேரளா' இனி 'கேரளம்' - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாநிலத்தின் பெயரை கேரளம் என அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இந்த தீர்மானம் கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு, எட்டாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்கள் தூள் கிளப்புவார்கள் - முதல்வர் ஸ்டாலின்: தமிழக மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கமும் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இதுபோன்ற தூண்டுதல்கள்தான், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண், அனைவருக்கும் ஐஐடி போன்ற திட்டங்கள். இந்தாண்டு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு செல்லப் போகிறார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.

மதுரை அதிமுக மாநாட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: காவல்துறைக்கு உத்தரவு: மதுரையில் ஆகஸ்ட் 20-ல் நடைபெறும் அதிமுக மாநாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் தேவையான பாதுகாப்பு வழங்குவதை போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியிடம் 3-வது நாளாக அமலாக்கத் துறை விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மூன்றாவது நாளாக புதன்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

இயக்குநர் சித்திக் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி: மலையாளம், தமிழ், இந்தியில் வெற்றிப் படங்களை கொடுத்த புகழ் பெற்ற இயக்குநர் சித்திக் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் கொச்சியின் கடவந்த்ரா பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகர் லால் சித்திக்கின் உடலை பார்த்து உடைந்து அழுதார். அவருக்கு இயக்குநர் ஃபாசில் ஆறுதல் கூறினார். டோவினோ தாமஸ், ஜெயராம், வினீத், இயக்குநர் ஷியாத் கொக்கர், ரஹ்மான், இயக்குநர் பி.உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சித்திக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜயகாந்த், சூர்யா உள்ளிட்டோர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘அணு ஆயுதத்தை நம்பியிருக்க வேண்டாம்’: கடந்த 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இந்தத் தாக்குதலின் நினைவு தினமான இன்று அணு ஆயுதத்தை நம்பி உலக நாடுகள் இருக்க வேண்டாம் என நாகசாகி நகர மேயர் ஷீரோ சுசுகி வலியுறுத்தியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in