

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களும் உடன் அழைத்து வந்திருந்தனர்.
கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். கடந்த மே 26-ம் தேதி வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதாரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னையில் அமலாக்கத் துறையினர் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூர் நாமக்கல் புறவழிச்சாலை ராம் நகரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் புதன்கிழமை (ஆக.9) 2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின்போது, பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்துள்ளனர். பொறியாளர்கள் மூலம் கட்டிடத்தை மதிப்பீடு செய்யும் பணிகள், இடத்தை அளவீடு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அசோக்குமார் மனைவி மற்றும் ஆடிட்டருக்கு நோட்டீஸ்: கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அசோக்குமாரின் ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறையினர் சோதனைக்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராகக்கூறி நோட்டீஸ் ஒட்டி திரும்பினர். அதேபோல், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அசோக்குமார் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் சென்றனர். அங்கும் யாரும் இல்லாததால், ராம் நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் ஆவணங்களுடன் அசோக்குமாரின் மனைவி நிர்மலா அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். அதேநேரம், ராம்நகரில் உள்ள புதிய பங்களாவில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.