ராஜஸ்தானில் போட்டித் தேர்வு எழுதி 51 வயதில் உதவி ஆட்சியர் ஆன பெண்

ராஜஸ்தானில் போட்டித் தேர்வு எழுதி 51 வயதில் உதவி ஆட்சியர் ஆன பெண்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: கரிமா சர்மா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது அவருக்கு வயது 51. இந்த வயதில் உள்ள பலரும், பணி ஓய்வு குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், கரிமா சர்மா அரசு தேர்வு எழுதி உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

கரிமா சர்மா ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரது கணவர் அரசு அதிகாரியாக இருந்துவந்தார். தன்னுடைய மனைவியின் ஆசிரியர் பணிக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.

ஆனாலும், தன் மனைவி அரசு வேலையில் சேர வேண்டும், அதுவே மனைவியின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும் என்று அவர் விரும்பினார். கரிமா சர்மாவுக்கும் தன் கணவரின் விருப்பப்படி அரசுப் பணியில் சேர ஆர்வம் இருந்தது என்றாலும், அன்றாட பள்ளிப் பணிகளுக்கு மத்தியில் போட்டித் தேர்வில் கவனம் செலுத்துவது அவருக்கு சிரமமாக இருந்தது.

இந்நிலையில் திடீரென்று அவரது கணவர் உடல்நலம் குன்றி வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. உடல் நலம் தொடர்ந்து மோசமடையவும் 2014-ம் ஆண்டு அவர் காலமானார். கணவர் இறந்ததையடுத்து, கணவரின் விருப்பமான அரசுப் பணியில் சேர்வதை இலக்காகக் கொண்டு உழைக்கத் தொடங்கினார் கரிமா சர்மா.

பெரும்பாலான அரசு தேர்வுகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40-ஆக உள்ளது. விதவைப் பெண்களுக்கு இந்த வயது வரம்பில் சில விலக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, போட்டித் தேர்வுக்கு கரிமா சர்மா தயாராக தொடங்கினார்.

2016-ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சியடைந்து தாசில்தாராக ஆனார். ஆனால், அதோடு அவர் நின்று விடவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த தேர்வுகளில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆட்சியராக பணி பெற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in