எதிர்க்கட்சிகளின் 'I.N.D.I.A' கூட்டணி முதல் செந்தில் பாலாஜி மேல்முறையீடு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 18, 2023

எதிர்க்கட்சிகளின் 'I.N.D.I.A' கூட்டணி முதல் செந்தில் பாலாஜி மேல்முறையீடு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 18, 2023
Updated on
3 min read

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பெயர் ‘இந்தியா’: வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக புதிய பெயர்களை பரிந்துரைக்க திங்கள்கிழமை நடந்த இரவு விருந்தில் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் 4 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில், ‘INDIA’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

I என்பது Indian, N என்பது National, D என்பது Democratic, I என்பது Inclusive, A என்பது Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி என்பது ‘இந்தியா’ கூட்டணிக்கான விரிவாக்கம் ஆகும்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “சென்னையில் நடந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலேயே காங்கிரஸுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை. பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். காங்கிரஸின் விருப்பம் எல்லாம் அரசியல் சாசனம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியைப் பேணுவது மட்டுமே" என்று தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சாதி வெறியும், ஊழலும்தான் எதிர்க்கட்சிகளின் அடையாளம்” - பிரதமர் மோடி: போர்ட் பிளேரில் வீர சாவர்க்கர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "அவர்களின் இந்தச் சந்திப்புக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்னவென்றால், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே வருபவர்கள் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் ஜாமீனில் வெளியில் இருந்தால், அவர்கள் இன்னும் அதிக மரியாதைக்கு உரியவர்களாகிறார்கள்.

ஒருவர் ஒரு சமூகத்தை அவமதித்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார் என்றால், அவர் கவுரவத்துக்கு உரியவராகிறார். இந்தியாவின் அவல நிலைக்குக் காரணமானவர்கள் தற்போது தங்கள் கடைகளைத் திறந்துள்ளனர். அவர்களுடைய கடைகளில் சாதி வெறி விஷமும், அபரிமிதமான ஊழலும் உத்தரவாதம். இப்போது, அவர்கள் பெங்களூரில் இருக்கிறார்கள்" என்றார்.

“என்டிஏ கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது”- நட்டா: தலைநகர் டெல்லியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 38 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு முன்பு பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரத்துக்காக இணைந்த கூட்டணி அல்ல. இது சேவைக்காக இணைந்த கூட்டணி. இது இந்தியாவை வலிமைப்படுத்தும் கூட்டணி. பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் ஆகியனவற்றால் இணைந்த கூட்டணி” என்றார்.

அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடியிடம் தொலைப்பேசி வழியாக பேசி, அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அவரிடம் அறிவுரை கூறினார்.

மேலும், மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மிக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என்று பொன்முடியிடம் முதல்வர் தெரிவித்தார் .

இதனிடையே, அமலாக்கத் துறை திங்கள்கிழமை அனுப்பிய சம்மனின் அடிப்படையில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை மாலை மணிக்கு ஆஜராகினர்.

முன்னதாக, சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.81 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மேலும், ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு: ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ‘கைது நடவடிக்கை சட்ட விரோதமானது அல்ல’ என்று 3-வது நீதிபதி சிவி கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

‘ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் அரசியல் விளையாட்டு...’ : அதிமுக பொதுச் செயலாளர் எட்பபாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், ‘ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டுகளுக்காக, நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்தப்படுகிறது’ என்று உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைப்பு: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ராகுலின் மேல்முறையீட்டு மனு மீது ஜூலை 21-ல் விசாரணை: மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜூலை 21-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோய் காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

பெங்களூருவில் இருந்து தனிவிமானம் மூலம் அவரது உடல் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர், வியாழக்கிழமை மதியம் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

உம்மன் சாண்டியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உம்மன் சாண்டிக்கு தலைவர்கள் புகழஞ்சலி: "பொது மக்களின் பணிக்காக தனது வாழ்க்கையை ஒப்படைத்த மிகவும் பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவர்" என்று மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"மக்களுக்கான அவரது சேவையும், அர்ப்பணிப்பும் என்றும் நினைவில் கொள்ளப்படும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

“அவர் ஒரு சிறந்த அரசியல் ஆளுமை மற்றும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் உண்மையான மக்கள் தலைவர்” என்று முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அவருக்கு பிரியாவிடை செலுத்துவது கடினம். அவர் திறமையான நிர்வாகி. மக்களுடன் நெருங்கிப் பழகிய தலைவர்" என்று தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in