2019 மக்களவைத் தேர்தலின்போது அவதூறு பேச்சு - ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

ஆசம் கான்
ஆசம் கான்
Updated on
1 min read

லக்னோ: அவதூறு வழக்கில் சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக ஆசம் கான் போட்டியிட்டார். அப்போது ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரசு மூத்த அதிகாரிகள் குறித்து அவர் அவதூறாகப் பேசினார்.

இதுதொடர்பாக அந்தப் பகுதி துணை வளர்ச்சி அலுவலர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆசம் கான் மீது 3 பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராம்பூரில் உள்ள எம்பி,எம்எல்ஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஷோபித் பன்சால் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதன்படி இரு சட்டப் பிரிவுகளில் ஆசம் கானுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சட்டப் பிரிவில் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

பல்வேறு வழக்குகள் தொடர்பாக ஆசம் கான் 27 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். புதிய வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in