டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத கனமழை பதிவு - இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத கனமழை பதிவு - இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்
Updated on
2 min read

புதுடெல்லி: புதுடெல்லியில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பதிவாகி இருக்கிறது.

டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி சப்தர்ஜங் பகுதி வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 1958ஆம் ஆண்டுக்குப் பிறகான 3வது அதிகபட்ச கனமழை இதுவாகும். 1958 ஜூலை 20-21ல் 266.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதுதான் டெல்லியில் பெய்த அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. அதற்கடுத்ததாக, 1982ம் ஆண்டு ஜூலை 25-26ல் பதிவான 169.9 மில்லி மீட்டர் கனமழை 2ஆவது அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்றும் இன்று காலை வரையுமான 24 மணி நேரத்தில் பெய்த 153 மில்லி மீட்டர் மழை 3வது அதிகபட்ச மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக கனமழை பதிவாகி இருக்கிறது.

இந்த கன மழை காரணமாக டெல்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பல சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இன்றும் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜாகிரா பகுதியில் இருந்த பழங்கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். டெல்லியை ஒட்டிய குருகிராமில் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததை அடுத்து, அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்றும் மிக அதிக கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இவ்விரு மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து தேசிய நெடுஞ்சாலை-9 மூடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "உத்தரகாண்ட்டில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பேரிடர் மேலாண்மை ஆணையமும் மாநில அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாத்ரிகர்களின் பயணத்திற்கு அனுமதி கொடுக்கும் விஷயத்தில் வானிலையைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்கள் கடந்த 2 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக மாறியதைத் தொடர்ந்து அவர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அமர்நாத் குகைப் பகுதியில் லேசான பனிப்பொழிவு பெய்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in