Published : 17 Jun 2023 07:18 PM
Last Updated : 17 Jun 2023 07:18 PM

“இரட்டை வேட நிலைப்பாடு” - எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: சமூக ஊடகத்தில் தவறான தகவலை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடகப் பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டுள்ளார். அவர் கைது கண்டனத்துக்குரியது. மலக்குழி மரணங்களின் மீது தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல், அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி. சூர்யாவை தண்டிக்க முயற்ச்சி எடுப்பது நியாயமா? தமிழக முதல்வர் உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மலக்குழியை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரை கட்டாயப்படுத்தியவர் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, சிபிஎம் கட்சியின் மதுரை எம்.பி.-யை விமர்சித்துள்ளார். அந்த விமர்சனத்தில் ஆட்சேபிக்கும்படியாக ஒரு வார்த்தைகூட இல்லை. இருந்தும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அமைச்சர் (செந்தில் பாலாஜி) கைது செய்யப்பட்டதால் முதல்வர் மு.க. ஸ்டாலின் சகிப்பின்மையுடன் நடந்து கொண்டுள்ளார். அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 1975-ல் அவசரநிலைக்கு எதிராக போராடிய நாங்கள் இப்போதும் போராடுவோம். நீங்கள் தவறான இலக்கை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் டாம் வடக்கன், "மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர். இதைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டதற்காக எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்பது தெளிவாகி உள்ளது. இதன்மூலம் அவர் பேச்சு சுதந்திரத்தை பறிக்க முயல்கிறார். இது பழிவாங்கும் அரசியல் இல்லையா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

"மலம் கலந்த கழிவு நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொல்வது சட்டப்படி குற்றம். (இதன் காரணமாகவே அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். பின்னர் இறந்தார்). இதை செய்ய சொன்னது பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் நாதன் என்கின்ற விஸ்வநாதன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். இவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்.

வார்டு உறுப்பினர் தன் கட்சியைச் சார்ந்தவர் என்பதாலும் கழிவுநீரில் இறங்கி இறந்தவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்ணையும் வாயையும் மூடிக்கொண்டு இருக்கிறார்" என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் மா.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்துள்ளார்.

மத்திய மின்னணி மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி, பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் எஸ்.ஜி. சூர்யாவின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லை என்று குறிப்பிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, ‘பொய்யை பரப்புகிற நபருக்கு மத்திய அமைச்சர்கள் வக்காலத்து வாங்குகின்றனர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதன் விவரம்: நிர்மாலா சீதாராமன் கண்டனமும், சு.வெங்கடேசன் பதிலும்

இதனிடையே, ட்விட்டரில் பொய்ச் செய்தி பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா 15 நாள் நீதிமன்றக் காவலில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். | வாசிக்க > சென்னையில் கைதான பாஜக மாநிலச் செயலாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: மதுரை சிறையில் அடைப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x