

பாட்னா: பிஹாரில் கங்கை ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில், அதன் கட்டுமான நிறுவனத்துக்கு அம்மாநில அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பிஹார் மாநில சாலை மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யாய் அம்ரித் கூறுகையில், "பிஹார் ராஜ்ய புல் நிர்மான் நிகம் நிறுவனத்தின் இயக்குநர், இடிந்து விழுந்த பாலத்தின் கட்டும் பணியினை மேற்கொண்டு வந்த ஹரியாணாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அரசு ஏன் அந்நிறுவனத்தினை தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானத்தின் தரத்தினை கவனிக்கத் தவறி, தனது பணியினை சரிவரச் செய்யாத செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
இடிந்து விழுந்த பாலம் கங்கையாற்றின் குறுக்கே பகல்பூர் மற்றும் ககாரிகா மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்தது. சுமார் ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டுவந்த இந்தப் பாலத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அடிக்கல் நாட்டினார். பணிகள் 2019-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்து.
முன்னதாக, மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “பாலத்தின் சில பகுதிகள் ஏற்கனவே திட்டமிட்டு இடிக்கப்பட்டன. இப்போது பாலம் இடிந்திருப்பது அதன் கட்டுமான உறுதியின் மீது இருந்த சந்தேகத்தினை உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு மழையின்போது மின்னல் தாக்கி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
பாலம் விழுந்தது: பிஹார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடிந்து விழுந்தது. அந்தக் காட்சியை உள்ளூர் மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வந்தனர். பாலம் இடிந்தது தொடர்பாக விசாரணை நடத்த பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டிருந்தார்.