

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் கோர விபத்து நிகழ்ந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், ஒரு சரக்கு ரயில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் ஆகியவை இந்த விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், சனிக்கிழமை மாலை வரை 261 உயிரிழந்ததாகவும், ஏறத்தாழ ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தை நிகழ்ந்ததை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உள்ளூர் மக்களுக்கும் மீட்புக் குழுக்களும் இரவு முழுவதும் பணியாற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த மக்களுக்கு பாலாசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு: ரயில்வே அமைச்சர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விபத்து பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், இதுபோன்ற நிகழ்வு நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி: ஒடிசாவில் விபத்து நடந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் இருந்து ஒடிசா புறப்பட்டு வந்த பிரதமர் மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதிக்கு வந்தார். விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட அவரிடம், பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர்.
கவாச் ஏன் இல்லை? - திரிணமூல் காங்கிரஸ் கேள்வி: ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். ரயில்வே துறை என்னுடைய குழந்தை போன்றது. ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்த நான், என்னுடைய ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார். கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேட் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? ஏன் மொத்த இந்திய ரயில் பாதைகளில் 2% மட்டுமே கவாச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனிடையே, சனிக்கிழமை நடைபெறவிருந்த கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. அத்துடன், கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டன. சனிக்கிழமை ஒருநாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
உறவினர்கள் செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா சென்றடைந்த தமிழக அமைச்சர்கள் குழு: ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சனிக்கிழமை பிற்பகல் ஒடிசா சென்றடைந்து செயலாற்றத் தொடங்கியது.
ஒடிசா ரயில் விபத்து - தலைவர்கள் இரங்கல்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேதனை பகிர்ந்த உலகத் தலைவர்கள்: ஒடிசா ரயில் விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஜப்பான் பிரதமர் கிஷிடா, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
“விபத்து நடந்த இடத்தில் 2 மணி வரை இருந்தோம்”: மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் உயிர் தப்பிய ஒரு சிலர் விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்களில் சென்னை மாணவி ஒருவர் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் பி-8 பெட்டியில் இருந்தேன். எங்களின் பெட்டியில் பெரிய சேதம் இல்லை. இன்ஜின் தொடங்கி, முன்பதிவு செய்யாத பெட்டிகள், படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் அனைத்தும் தரம் புரண்டு இருந்தன. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிகம் பேர் பயணித்தனர். அவர்களில் பலருக்கு 17 முதல் 30 வயது வரைதான் இருக்கும். விபத்து ஏற்பட்டு 2 மணி வரை நேரம் அங்குதான் இருந்தோம். இதன்பிறகு பேருந்து மூலம் புவனேஸ்வர் வந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளோம்" என்றார்.
30 ஆண்டுகளில் நிகழ்ந்த 3-வது மிகப் பெரிய விபத்து: நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து, கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துக்களில் மூன்றாவது மிகப் பெரிய ரயில் விபத்து என்பது தெரியவந்துள்ளது.