Published : 03 Jun 2023 09:03 AM
Last Updated : 03 Jun 2023 09:03 AM

ஒடிசா ரயில் விபத்து | உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு: ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

ரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், " இது ஒரு துயர்மிகு விபத்து. ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு மிகச்சிறந்த உயர் சிகிச்சை தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார்" என்று கூறினார்.

விபத்து நடந்தது எப்படி? கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது.

அவசர எண்கள் அறிவிப்பு: விபத்து குறித்து தகவல் அறிய, சிறப்பு மீட்பு படை அலுவலகத்தின் அவசர எண் வழங்கப்பட்டுள்ளது. 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் விவரம் அறிய 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என ரயில்வே மீட்பு பணி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் விபத்து காரணமாக கோவா - மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக கொங்கன் ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x