

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 2 படகுகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆந்திர மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 பேர் பத்திரமாகக் கரை சேர்ந்ததாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ள கம்மம் மாவட்டத்திலும் முரசு புயலின் தாக்கம் காணப்பட்டது. கடந்த புதன்கிழமை (4-ம் தேதி) மாலை, சாத்துப்பள்ளி மண்டலத்தில் உள்ள பேதுபல்லி ஏரியில் 3 மீனவர்கள் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர்களை மீட்க ஆந்திர மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 2 படகுகளில் சென்றனர். ஆனால், அந்தப் படகுகள் ஏரியில் கவிழ்ந்ததால் மீட்புக் குழுவினரும் தண்ணீரில அடித்துச் செல்லப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று அதிகாலை மீட்புப் படையினர் 10 பேரும் எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பாகக் கரை சேர்ந்தனர். முதலில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 3 மீனவர்களும் பாதுகாப்பாகக் கரை சேர்ந்தனர். இந்த தகவலை கம்மம் மாவட்ட ஆட்சியர் திவாகரா நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.