

புதுடெல்லி: கடும் வெயில் காரணமாக 12 மாநிலங்களில் 10 வனப் பகுதிகளில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. மத்திய பிரதேச வனப்பகுதிகளில் மட்டும் 634 இடங்களில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
கோடைக் காலம் என்பதால், நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் காரணமாக வெப்ப அலை வீசுகிறது. இதன் காரணமாக 12 மாநிலங்களில் 10 வனப் பகுதிகளில் காட்டுத் தீ கடந்த 3 நாட்களுக்கு மேலாக பற்றி எரிவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேச வனப் பகுதியில் 634 இடங்களில் காட்டு தீ பற்றியுள்ளன.
வடக்கில் உத்தராகண்ட், மேற்கில் குஜராத் முதல் தெற்கே ஆந்திரா வரை 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக பல உயிரினங்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தலா 465 இடங்களிலும், ஆந்திராவில் 400-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அசாம் மாநிலத்தில் 190 இடங்களிலும், மணிப்பூரில் 128 இடங்களிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட்டில் மட்டும் 130 ஹெக்டேர் வனப் பகுதி காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. சார்தாம் யாத்திரை நடைபெறும் பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.