

குலசேகரன்பட்டினம் அருகே மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படும் நீண்ட ஆயுள் கொண்ட ‘ஆயி’ மரம்.
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் அருகே நீண்ட ஆயுள் கொண்ட ‘ஆயி’ மரம் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஆய்வு நடத்தினால் புவியியல் மாற்றத்தின் காலகட்டம் குறித்த விவரங்களை அறியலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: ‘ஆயி’ மரம் என்பது பொதுவாக ஹோலோப்டிலியா இன்டெக்ரிபோலியா (Holoptelea integrifolia) என்ற தாவரவியல் பெயரால் அறியப்படும் ஒரு மர வகையை சேர்ந்தது.
இது தமிழ்நாட்டில் ஆயா மரம், ஆவு மரம், ஆமிலி, தம்பச்சி போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இம்மரம் சரியான சூழ்நிலையில் நூறு அடி உயரம் வரை கூட வளரக்கூடியது. ஆயி மரம் பல நூறு ஆண்டுகள் வாழக்கூடியது. இதன் சரியான ஆயுட்காலம் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.
ஆனால் பொதுவாக இது ஒரு நீண்ட காலம் வாழும் மரமாகக் கருதப்படுகிறது, புகை உறிஞ்சும் திறன் கொண்ட ஒரு சூழல் காப்பு மரமாகவும் பயன்படுகிறது. ஆரம்பத்தில் மெதுவாக வளர்ந்தாலும், முதிர்ச்சியடைந்த பிறகு இதன் உயரம் 50- 60 அடி அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். இது ஒரு உயரமான, மெலிந்த மரமாகும்.
குலசேகரன்பட்டினத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள தீதத்தாபுரம் (ஆதி அய்யா குறிச்சி) கிராமத்தில் உள்ள மிக பழமையான பொன் அய்யன் (குளத்துக்கரை அய்யன்) ஆலய பகுதியில் ஆயி மரம் காணப்படுகிறது.
சுமார் 60 முதல் 100 அடி வரை வளரக்கூடிய இந்த ஆயி மரம் தற்போது மூன்றில் இரண்டு பங்கு மண்ணில் புதையுண்டு காணப்படுகிறது. இந்த பகுதியில் முறையாக ஆய்வுகள் செய்தால் புவியியல் மாற்றத்தின் காலகட்டம் குறித்த விவரங்களை அறியலாம் என்றார் அவர்.