

யானைகள்தான் காடுகளை உருவாக்குகின்றன, மனிதர்கள் அல்ல. யானை நடக்கும் பாதை வெறும் மண்ணல்ல; அது காடுகளின் மரபணுவைச் சுமந்து செல்லும் முதன்மை ரத்தக்குழாய். அதில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து அடைப்பு ஏற்படுத்தினால், வனத்தின் இதயத் துடிப்பே நின்றுவிடும்.
யானை (வலசை) வழித்தடங்கள் என்பது அதன் உரிமை, நமது சூழலியல் மண்டலத்தின் உயிர்நாடி. அது பாதிக்கப்படும்போது, ஒட்டுமொத்த வனமே பாதிக்கப்படும்.
யானை வழித்தடங்கள் என்றால் என்ன?
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தின்படி, ‘யானைகளின் வாழ்விடம் ஒரே காட்டுப் பகுதியில் முடிந்துவிடுவதில்லை. இரு பெரிய வனப்பகுதிகளை இணைக்கும் குறுகிய நிலப்பகுதியே யானை வழித்தடம் எனப்படுகிறது. யானைகளின் நடமாட்டத்தை வழித்தடம் அல்லது வலசைப் பாதைகளே எளிதாக்குகின்றன’ எனத் தெரிவித்துள்ளது.
காடுகளுக்கும் யானைகளுக்கும் இந்த வலசைப் பகுதி மிக முக்கியம். யானைகள் ஒரே காட்டில் வசித்தால் ஒரே குடும்பத்துக்குள் இனப்பெருக்கம் நடந்து நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். வலசை இருந்தால்தான் காடு விட்டு மற்றொரு காட்டுக்குச் சென்று, வேறு யானைகளுடன் இனப்பெருக்கம் செய்ய முடியும். ஒரு காட்டில் வறட்சி ஏற்படும்போது, யானைகள் இந்த வழித்தடங்கள் வழியாகவே செழிப்பான அடுத்த வனப்பகுதிக்குச் செல்கின்றன.
உணவு - நீர் தேவை:
ஒரு வளர்ந்த யானைக்குத் தினமும் 200 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் தேவை. இதற்காக அவை ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் இடம்பெயர்கின்றன.
மரபணுப் பன்முகத்தன்மை:
வலசைப் பாதைகள் மூலமே வேறு காடுகளுக்குச் சென்று ஆரோக்கியமான இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. யானைகள் தாங்கள் பயணிக்கும் வழியெங்கும் சாணத்தின் மூலம் விதைகளைப் பரப்பி, புதிய மரங்களும் காடுகளும் உருவாக உதவுகின்றன. காடுகளை உருவாக்குவதில் யானைகளுக்குத்தான் பெரும்பங்கு உள்ளது.
வியப்பூட்டும் வாழ்க்கை முறை:
யானைகள் மனிதர்களைப் போலவே ஆழ்ந்த பாசமும் குடும்பப் பிணைப்பும் கொண்டவை. அனுபவமிக்க மூத்த பெண் யானையே கூட்டத்தின் தலைவர். ஆபத்து காலத்தில் பாதுகாப்பதும், வறட்சியில் நீர்நிலைகளுக்கும், உணவு கிடைக்குமிடத்தை வழிநடத்தும்.
கூட்டத்தில் பிறக்கும் குட்டி ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சொந்தமானது. மற்ற பெண் யானைகளும் சேர்ந்து பராமரித்துப் பயிற்சிகளை அளிக்கின்றன. குட்டி யானைக்கு எவ்வாறு உணவு உண்பது, தும்பிக்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையெல்லாம் மூத்த குடும்ப உறுப்பினர்களே கற்றுத் தருகின்றனர்.
பாலியல் முதிர்ச்சி அடைந்ததும் ஆண் யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாகவோ பிற ஆண்களுடனோ வாழும்.
மனித - யானை மோதல்:
தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவற்றின் ஆய்வுகளின்படி, ‘உணவு, நீர், பருவ காலம் மற்றும் இடத்தின் பரவல் ஆகியவை யானைகளின் நடமாட்டத்தைத் தீர்மானிக்கின்றன. இவற்றில் இடையூறு ஏற்படும்போதுதான் மனித - யானை மோதல் மோதல் தொடங்குகிறது’ எனத் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதைகள், சுரங்கங்கள், சொகுடு விடுதிகள், ஹோட்டல்கள் கட்டுவது மற்றும் மின்வேலிகளால் யானைகளின் பாரம்பரியப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. முன்னோர்களின் பாதையை நினைவில் வைத்துள்ள யானைகள், அங்குத் தடைகள் இருக்கும்போது அவற்றை உடைத்துக்கொண்டு ஊருக்குள் நுழைகின்றன.
யானை உயிரிழப்புகள் எவ்வளவு?
மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ரயிலில் அடிபட்டும், மின்சாரம் தாக்கியும் 1,000-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல யானைகள் தாக்கியதில் 7,000-க்கும் மேற்பட்ட மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். அது குறித்த புள்ளிவிவரங்கள்:
நாடு முழுவதும் 1,653 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி 1,105 யானைகளும், ரயிலில் அடிபட்டு 225 யானைகளும் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக அசாமில் 82 யானைகள், மேற்கு வங்கத்தில் 62 யானைகள் உயிரிழந்துள்ளன.
7,000 மனித உயிரிழப்புகள்:
யானைகள் தாக்கியதில் 7,868 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக எடுத்துக்கொண்டால், ஒடிசாவில் 1,495 பேர், மேற்கு வங்கத்தில் 1,306 பேர், ஜார்க்கண்ட்டில் 1,205 பேர் மற்றும் அசாமில் 1,161 பேர் இந்தக் காலக்கட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
யானைகளின் வாழ்விடக் கணக்கீடு
இந்தியாவில் 4 விதமான முக்கிய யானை வலசைப் பகுதிகள் உள்ளன. அவை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, வடகிழக்கு மலைகள் - பிரம்மபுத்திரா நிலப்பகுதி, சிவாலிக் மலைப் பகுதி மற்றும் கங்கைச் சமவெளி, மத்திய இந்தியா - கிழக்கு மலைப் பகுதியாகும்.
2023 வனவிலங்கு நிறுவன அறிக்கையின்படி, இந்தியாவில் 22,446 யானைகள் 15 மாநிலங்களில் உள்ள 150 வலசைப் பாதைகளைப் பயன்படுத்துகின்றன. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக 26 வலசைப் பாதைகள் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் மொத்தம் 11,034 யானைகள் வாழ்கின்றன. அதாவது, யானைகளின் மொத்த எண்ணிக்கையில் 53% யானைகள்
மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்கின்றன. கர்நாடகாவில் 6,103 யானைகள், கேரளாவில் 2,785 யானைகள், தமிழ்நாட்டில் 3,136 யானைகள் உலவுகின்றன.
வடகிழக்கு மலைகள் - பிரம்மபுத்திரா: 6,559 யானைகள் (29%), சிவாலிக் மலைப் பகுதி: 2,062 யானைகள் (9.2%), கிழக்குத் தொடர்ச்சி மலை: 1,891 யானைகள் (8.4%) வாழ்கின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
மனித - யானை மோதலைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு பிறப்பித்த உத்தரவுகள் மிகவும் முக்கியமானவை.
‘பயிர்ச் சேதத்தைக் காரணம் காட்டி யானைகளின் பாரம்பரியப் பாதைகளில் மின்வேலிகள் போன்ற தடைகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. நாடு முழுவதும் உள்ள வலசைப் பாதைகளை மறு ஆய்வு செய்து, அவற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
யானைகளை விரட்டத் தீப்பந்தங்கள், முள்கம்பிகள் போன்ற கொடூரமான வழிகளைப் பயன்படுத்தக் கூடாது. நீலகிரி சிகூர் வழக்கில் சுட்டிக்காட்டியபடி, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ(ஜி)-ன் படி மனிதர்களின் பொழுதுபோக்கை விடக் காட்டுயிர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதே அரசின் முதன்மைக் கடமையாகும்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.