

படம்: மெட்டா ஏஐ
தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் மற்றும் வண்ணமயமான கொண்டாட்டங்கள்தான். அதேவேளையில், ‘மக்களுக்கு கொண்டாடும் உரிமை ஒருபுறம் இருக்க, சுத்தமான காற்றை சுவாசிப்பது அடிப்படை உரிமை’ என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதையொட்டி, உச்ச நீதிமன்றம், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆகியவை வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து, ‘வரையறுக்கப்பட்ட தளர்வுகளை’ வழங்கியது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) அங்கமான தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) அமைப்பின் பரிந்துரைப்படி, மாசு வெளியேற்றம விதிமுறைகளுக்கு உட்பட்ட இரண்டாம் தலைமுறை (ஜென் 2 - Gen 2) பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படாது என்றும், குறிப்பிட்ட நேர வரம்புகளுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜென் 2’ பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) அங்கமான தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் (NEERI) உருவாக்கப்பட்ட குறைந்த மாசு உமிழ்வு கொண்ட பட்டாசுகளே ‘பசுமைப் பட்டாசுகள்’ எனப்படுகின்றன. இதன் அடுத்தகட்டமான ‘ஜென் 2’ பசுமைப் பட்டாசுகளில் அமோனியம், அலுமினியம், பேரியம், கந்தகம் போன்ற நச்சுப் பொருட்களின் பயன்பாடு பெருமளவு தவிர்க்கப்பட்டு, மிகக் குறைந்த புகையையும் சாம்பலையும் வெளியேற்றும் வகையில் வேதியியல் கலவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 'SWAS', 'SAFAL', 'STAR' போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
‘ஜென் 2’ பசுமைப் பட்டாசுகளில் ஜியோலைட் (Zeolite) போன்ற சேர்க்கைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தூசியைக் கட்டுப்படுத்தும் வகையில் நீராவியை (Water Vapor) வெளியிடும் சேர்மங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எரிதலை மேம்படுத்தும் பிரத்யேக உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
காற்று மாசுக்கு தீர்வா?
இரண்டாம் தலைமுறை பசுமைப் பட்டாசுகளை 100% சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது எனக் கூறிவிட முடியாது. இவற்றை ‘குறைந்த உமிழ்வு கொண்ட பட்டாசுகள்’ என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
முந்தைய பசுமைப் பட்டாசுகள் 30% மாசுபாட்டை குறைத்தன. ஜென் 2 ட்டாசுகள் PM10 மற்றும் PM2.5 மாசுபாட்டை 45% முதல் 60% வரை குறைக்கின்றன. இருப்பினும், இவை ஆய்வக அளவில் பெறப்பட்ட புள்ளிவிவரங்களே தவிர, நிஜச் சூழலில் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டவை அல்ல. PESO உரிமம் பெற்ற உற்பத்தியாளர்கள் மட்டுமே NEERI-யிடம் பதிவு செய்து இவற்றைத் தயாரிக்க முடியும்.
வேறுபாடுகள் என்னென்ன?
வேதியியல் கலவை:
வழக்கமான பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் மற்றும் நச்சு உலோகங்கள் அதிகம் இருக்கும். பசுமைப் பட்டாசுகளில் இவை தவிர்க்கப்பட்டு, நீராவியை வெளியிடும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
புகை மற்றும் மாசு:
வழக்கமான பட்டாசுகளை விட பசுமைப் பட்டாசுகள் 30% முதல் 60% வரை குறைந்த மாசையே வெளியிடும்.
ஒலி அளவு: வழக்கமான பட்டாசுகள் 160 dB வரை சத்தம் எழுப்பும். பசுமைப் பட்டாசுகள் 110 முதல் 125 dB-க்குள் மட்டுமே ஒலிக்கும்.
தூசிக் கட்டுப்பாடு: வெடிக்கும்போது நீராவியை வெளியிடுவதால், உருவாகும் தூசியை உடனுக்குடன் கீழே படிய வைக்கிறது.
பசுமைப் பட்டாசுகள் பற்றிய விவாதம் ஏன்?
தீவிரமடையும் காற்று மாசு:
குளிர்காலத்தில் PM 2.5 அதிகரிப்பதால் முதியவர்கள், குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரம்:
முழுமையான தடை என்பது சிவகாசி போன்ற உற்பத்தி மையங்களில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதனால் மாற்று ஏற்பாடுக்கு வழிவகை செய்யப்படுகிறது.
போலி விற்பனை தடுப்பு:
சந்தையில் போலி சான்றிதழுடன் நச்சுப் பட்டாசுகள் குறிப்பாக சீனப்பட்டாசுகள் விற்பனையாவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு அவசியமாகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவு:
பட்டாசுத் தடை எந்த குறிப்பிட்ட மதத்துக்கானது அல்ல; மக்களின் வாழும் உரிமையும் அதேசமயம், சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை அடிப்படை உரிமை சார்ந்த சுகாதார நடவடிக்கை’ என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி திட்டமும், IMD எச்சரிக்கையும்
டெல்லி அரசு தனது குளிர்காலச் செயல் திட்டத்தின் கீழ் 50% ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தையும், வாகன நிறுத்தக் கட்டண உயர்வு, கட்டுமானப் பணிகளுக்குத் தடை போன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள எச்சரிக்கையில், குளிர்காலத்தில் வீசும் மந்தமான காற்று மற்றும் வெப்பநிலை குறைவு காரணமாகப் பட்டாசுப் புகையும் விவசாயக் கழிவுப் புகையும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிலேயே தேங்கி நிற்பதால் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ நிலையை அடையக்கூடும் எனக் கூறியுள்ளது.
‘ஜென் 2’ பசுமைப் பட்டாசுகள், வழக்கமான பட்டாசுகளுக்குச் சிறந்த மாற்றாக உருவெடுத்திருந்தாலும், நகர்ப்புறங்களில் அவை முழுமையான தீர்வல்ல. கலாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஆரோக்கியத்தையும் சமநிலையில் பேண, அரசு சான்றளித்த பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்துவதும், விழிப்புணர்வோடு செயல்படுவதும் இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.