தாமிரபரணி நதியை பாதுகாக்க... - ‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் கருத்து

நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தாமிரபரணி பகுதியில் கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டார். | படம்: மு.லெட்சுமி அருண் |

நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தாமிரபரணி பகுதியில் கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டார். | படம்: மு.லெட்சுமி அருண் |

Updated on
1 min read

திருநெல்வேலி: தாமிரபரணி நதியை பாதுகாக்க நீதித்துறை, சட்டப்பேரவை மற்றும் நிர்வாகம் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என ‘இந்தியாவின் நீர் மனிதன்’ என அழைக்கப்படும் நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடர்பாக ஆய்வு செய்து, பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய, இந்தியாவின் நீர் மனிதன் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்துவது குறித்து கடந்த 4 நாட்களாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ராஜேந்திர சிங், திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தாமிரபரணி நதி மிகவும் மாசடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 6 முதல் 7 மாவட்ட ஆட்சியர்கள் தாமிபரணியை சுத்தம் செய்ய பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால், அந்தந்த ஆட்சியர்கள் மாற்றப்பட்டதும், பணிகளும் பாதியிலேயே நின்றுள்ளன. ஒரு நிலையான குழுவோ அல்லது அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரியோ இல்லாததே இதற்கு முக்கிய காரணம். நதியை தூய்மைப்படுத்தும் பணியை தற்காலிகமாக செய்யாமல், தொடர்ச்சியாக கண்காணிக்க ஒரு தனி கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

மக்கள்தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரை கலப்பது மிகப்பெரிய தவறு. சுத்தமான நீர் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றுக்கு தனித்தனி அமைப்புகள் இருக்க வேண்டும். நதிக்குள் கழிவுநீர் கலப்பதை தடுத்தால் மட்டுமே நதியை நிரந்தரமாக காப்பாற்ற முடியும்.

நதியின் ஆரோக்கியம் என்பது மனித ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சூழலியலோடு நேரடியாக தொடர்புடையது. எனவே, நதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகள், மாசுபாடு, முறைகேடுகள் ஆகியவை தாமிரபரணி நதியை மீட்பதில் முக்கிய தடைகளாக உள்ளன.

கங்கையுடன் ஒப்பிடும்போது தாமிரபரணி ஒரு சிறிய மற்றும் எளிய நதி. மிகக்குறைந்த மழையுள்ள ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும்போது, நல்ல மழையுள்ள இந்த பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம்.

இதற்கு நீதித்துறை, சட்டப் பேரவை மற்றும் நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தாமிரபரணி நதி குறித்த முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் ஒரு மாதத்துக்குள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறேன் என்றார்.

<div class="paragraphs"><p>நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தாமிரபரணி பகுதியில் கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டார். | <em><strong>படம்: மு.லெட்சுமி அருண்</strong></em> |</p></div>
குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்: இந்தூரில் புதிதாக 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in