குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்: இந்தூரில் புதிதாக 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

இந்தூரின் பகீரத்புரா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள்

இந்தூரின் பகீரத்புரா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள்

Updated on
1 min read

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தூர் மாநகரின் பகீரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த அதிகாரிகள், ‘‘பகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 398 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்று ஏற்பட்ட பகிரத்புராவில் சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,354 குடும்பங்களைச் சேர்ந்த 9,416 பேர் பரிசோதிக்கப்பட்டதில், அவர்களில் 20 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது’’ என தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் 6 பேர் உயிரிழந்திருப்பதாக கூறி வரும் நிலையில், இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவா 10 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்களோ 16 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்தூரைச் சேர்ந்த மாநில அமைச்சர் விஜய்வர்க்கியா, முட்டாள்தனமாக கேள்வி கேட்கக்கூடாது எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, ‘‘அசுத்தமான குடிநீர் விநியோகம் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

குடிநீர் குழாய்களில் அசுத்தமான நீர் வருவதாக பகீரத்புரா மக்கள் கடந்த 8 மாதங்களாக புகார் கூறி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை மாநில அமைச்சர் அநாகரிகமாகப் பேசி இருக்கிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 11-ம் தேதி போராட்டம் நடத்தப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடிநீர் தொற்று குறித்து ஆய்வு செய்ய கொல்கத்தாவைச் சேர்ந்த தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் இந்தூருக்கு வந்துள்ளனர். அவர்கள், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறைக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவார்கள் என்று மத்தியப் பிரதேச சுகாதார அதிகாரி மாதவ் பிரசாத் ஹாசானி தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இந்தூரின்&nbsp;பகீரத்புரா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள்</p></div>
டெல்லி கலவர வழக்கு | உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in