சிவகளை அருகே பெருங்குளத்தில் குவிந்துள்ள நீர்வாழ் பறவைகள்!

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கோரிக்கை
சிவகளை அருகே பெருங்குளத்தில் குவிந்துள்ள நீர்வாழ் பறவைகள்!
Updated on
2 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அருகே பெருங்குளத்தில் ஆயிரக்கணக்கான நீர்வாழ் பறவைகள் குவிந்துள்ளதால் இக்குளத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மருதூர் கீழக்கால் பாசனத்தில் கடைசியாக அமைந்துள்ள குளம் பெருங்குளம். பெருங்குளம் பேரூராட்சி மற்றும் சிவகளை ஊர்களுக்கு இடையே 857 ஏக்கர் பரப்பளவில் இக்குளம் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் காணப்படும். மேலும், குளத்தை சுற்றிலும் புதர்கள், சகதி நிறைந்து மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடமாக இருப்பதால் நீர்வாழ் பறவைகளுக்கு சொர்க்க பூமியாக இக்குளம் அமைந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த குளத்தை நோக்கி வெளிநாட்டு பறவைகள் படையெடுத்து வருகின்றன. ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான பறவைகள் பெருங்குளம் குளத்துக்கு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டு காணப்படும் நிலையில் பெருங்குளத்தில் கணிசமாக தண்ணீர் இருப்பதால் தற்போது இக்குளத்தை நேக்கி பறவைகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள நிலையில் தினமும் ஏராளமான மக்கள் இப்பறவைகளை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதுகுறித்து பறவையியல் ஆய்வாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜே.தாமஸ் மதிபாலன் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: தாமிரபரணி பாசனத்தில் 53 குளங்கள் இருந்தாலும் பெருங்குளத்துக்கு தான் பறவைகள் அதிகமாக வருகின்றன. இதற்கு காரணம் இந்த குளத்தில் தான் நீர்பாசிகள் அதிகம். நீர்பாசிகள் மற்றும் அதில் வாழும் பூச்சி இனங்கள் பறவைகளுக்கு முக்கியமான உணவாகும். அதுமட்டுமின்றி நீர்வாழ் பறவைகளுக்கு பாதுகாப்பான குளமாக இது திகழ்கிறது.

வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பறவைகள் இங்குவரும். பருவமழை தொடங்கி புதிய தண்ணீர் வரும் வரை பறவைகள் இங்கு தங்கியிருக்கும். அதுபோல இந்த ஆண்டும் ஏராளமான பறவைகள் வந்துள்ளன. வெளிநாட்டு பறவைகள் வருகை கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, 3 வகையான அரிவாள் மூக்கன், 2 வகையான நீர் காகம், 3 வகையான கொக்குகள், நாமக்கோழி, ஜம்பு கோழி, முக்குளிப்பான் போன்ற ஆயிரக்கணக்கான உள்நாட்டு பறவைகள் பெருங்குளத்தில் குவிந்துள்ளன.

தற்போது காட்விட், கார்கனி வாத்துகள், புலோவர் போன்ற வெளிநாட்டு பறவைகளும் வரத் தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் இந்த குளத்துக்கு வரும். தினமும் காலை 6.30 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் இந்த பறவைகளை காணலாம்.

ஆண்டு தோறும் இந்த குளத்துக்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வரும் நிலையில் அவற்றை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகளை கவரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும். மேலும், ராம்சார் தளம் என்ற பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதியாக அறிவித்தால் சர்வதேச வரைபடத்தில் பெருங்குளமும் இடம் பெறும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சிவகளை அருகே பெருங்குளத்தில் குவிந்துள்ள நீர்வாழ் பறவைகள்!
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துக்கு ஆதரவு ஏன்? - தமிழக காங்கிரஸ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in