

பரந்தூர் வழியாக சென்னை - பெங்களூருக்கு செல்ல உருவாக்கப்பட்ட விரைவு வழிச் சாலை.
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ், ‘எந்த ஒரு நகரத்தின் வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நிலம், நீர், வாழ்வாதாரத்தை அவர்களின் உண்மையான ஒப்புதலின்றி பலிகொடுத்து உருவாக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விமான நிலைய ஆணையம் 2022-ல் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையிலேயே, பரந்தூர் நீர்நிலைகள் சூழப்பட்ட இடம், 201 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட செயற்கை ஏரி 1.4 கி.மீ. தொலைவில் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏகனாபுரம் மக்கள் 1,000 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடினர். இது வளர்ச்சிக்கு எதிரான போராட்டமல்ல. தங்களது நிலம், நீர், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க நடந்த நியாயமான போராட்டம்.
பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு முன், பாதிக்கப்படும் மக்களின் உண்மையான ஒப்புதல் எவ்வளவு முக்கியம் என்பதை காங்கிரஸ் சமூக நீதி மற்றும் வளர்ச்சியிலும் வலியுறுத்தி வந்துள்ளது. எனவே, பரந்தூர் ரத்து முடிவு எங்களது அரசியல் அடிப்படைக் கொள்கையில் இருந்தே வருகிறது.
முந்தைய ஆளும் கட்சியின் அரசியல் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் எங்களது நிலைப்பாடு உருவாக்கப்படவில்லை. அரசே நியமித்த ஆய்வு மற்றும் அரசின் ஆவணங்களில் பதிவாகியுள்ள உண்மைகளின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவு உள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கான மாற்று இடத்தை முறையான சமூக தாக்க மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு போன்றவற்றை உள்ளடக்கிய வெளிப்படையான நடைமுறை மூலம் கண்டறிந்து, ஆய்வு செய்து, இறுதி அனுமதிகளைப் பெறுவதற்கான தெளிவான காலக்கெடுவை அரசு பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
ஒரு தவறான முடிவைத் திருத்துவது, சென்னையின் விமான நிலையம் அதன் முழுத் திறனை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மாற்றுத் திட்டத்தை முடிவில்லாமல் தாமதப்படுத்தும் புதிய காரணமாக மாறக்கூடாது.
நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம், போடூர், வாலத்தூர் மற்றும் அக்கம்பரம்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் நிலம் தொடர்பான நிலைப்பாட்டை மூன்று மாதங்களுக்குள் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இன்னும் வழங்கப்பட வேண்டிய சுமார் 30 சதவீதம் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அடிப்படை குடிமை வசதிகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்துக்கான எதிர்காலத்தில் எந்த இடம் தேர்வு செய்யப்பட்டாலும், பாதிக்கப்படும் மக்களுடன் உண்மையான, வெளிப்படையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். ஆனால், எந்த ஒரு நகரத்தின் வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நிலம், நீர், வாழ்வாதாரத்தை அவர்களின் உண்மையான ஒப்புதலின்றி பலிகொடுத்து உருவாக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.