

ஆட்கொல்லி புலியை பிடிக்க ஓவேலி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.
சென்னை/ கூடலூர்: கூடலூரில் மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூடலூரில் புலி தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் உறுப்பினர்கள் பேசியதாவது: திராவிட மணி (திமுக): கூடலூர் பகுதியில் புலி தாக்கி 2 பேர் இறந்துள்ளனர். அக்குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். உடனடியாக புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும் அல்லது மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும்.
நீலகிரியில் இரண்டு மாதங்களில் 8 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர். உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எம்.போஜராஜன் (பாஜக): கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பேர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கூடலூரில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. கூண்டு வைத்து புலியை பிடித்து இருந்தால் இரு உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலியை பிடிக்க வேண்டும்.
தளவாய் சுந்தரம் (அதிமுக): புலிகள் தொடர்ந்து மக்களை தாக்கி வரும் நிலையில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் மட்டுமல்ல, அரசு வேலையும் வழங்க வேண்டும். புலியை கொல்லாமல் மயக்க மருத்து கொடுத்து பிடித்து புலிகள் காப்பகத்தில் விடவேண்டும்.
வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார் பதிலளித்து பேசும்போது, “கூடலூரில் 2 பேரை கொன்ற புலியை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக 3 வனப்படை, 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மேலும் ஒரு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேமரா மூலம் புலியை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 9 பேர் உயிரிழந்த பிறகு தான் புலி பிடிக்கப்பட்டது. ஆனால் தவெக அரசு 2 பேர் உயிரிழந்தவுடன் புலியை பிடிக்கவும், குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புலியால் இனி ஒரு உயிர் கூட போகாது. மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு, புலிகள் காப்பகத்தில் விடப்படும்” என்றார்.
கூடலூர் தொகுதியில் 2 நாள் கடை அடைப்பு நடத்த முடிவு
கூடலூர் ஓவேலி பகுதியில் திரியும் ஆட்கொல்லி புலியை பிடிக்க 80 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தோட்டத் தொழிலாளர்களை தனியாக வேலைக்கு அனுப்ப வேண்டாம் என தோட்ட நிர்வாகங்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட வன அலுவலர் தேவராஜ் தலைமையில் உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரக அலுவலர்கள் மற்றும் விரைவு மீட்புக் குழுவினர் உட்பட 90 வனப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனுடன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவின் பேரில், வனச் சிறப்புப் படை வீரர்களும் புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடலூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் தி.மு.க. நகர செயலாளர் பாபு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், லாரஸ்டன் பகுதியில் புலி தாக்கி உயிரிழந்த இருவருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும். புலி தாக்குதலின் போது, ஒருவர் இறந்த சூழ்நிலையில் பொதுமக்களின் உணர்வுகளை மதிப்பளிக்காமல் ஏழு பேரை கைது செய்ததை கண்டிப்பதுடன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.