

சென்னை: பள்ளிக்கரணை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இது குறித்த அறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்க தடை கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பணிகள் குறித்த அறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்கைக் கோள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் சரியாக உள்ளதா என்பதை ஆவணங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.