

சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுபியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “போலீஸ் துறையின் மாண்பை சீர்குலைக்கும் பொறுப்பு துறப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின். ஏற்கெனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும், காவல்துறையின் கண்ணிய மரபுகளையும் மீறி மாநிலத்தின் உயர்ந்த டிஜிபி பதவிக்கு பொறுப்பு டிஜிபியை, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போதே இதற்கு தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து, நிரந்தர டிஜிபியை நியமனம் செய்ய வலியுறுத்தினோம்.
இந்த நிலையில்... இப்போது போலீஸ் துறையின் மாண்பை மீண்டும் கேள்விக்குறியாக்கும் வகையில், பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.
போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் இப்படி பொறுப்பற்று நடந்து கொள்வது காவல்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்!
கேட்டால் உத்திரபிரதேசத்திலும் பொறுப்பு டிஜிபி தான் என்கிறார்கள். அப்படி என்றால் பாஜக வழியில் தான் நாங்களும் போலீஸ் ராஜ்ஜியம் நடத்துகிறோம் என ஒப்புக் கொள்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னணி: தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு நேற்று முன்தினம் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பொறுப்பு டிஜிபியான வெங்கடராமன் வரும் டிச.25-ம் தேதி வரை மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதன்காரணமாக டிஜிபி பொறுப்பை கூடுதலாக அபய்குமார் சிங்குக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் 27 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர், தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியாக உள்ளார். அவருக்கு கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.