பண்ணவாடிக்கு அரிய வகை ஐரோப்பிய பறவை வருகை!

ஐரோப்பிய பட்டாணி உப்புக் கொத்தி

ஐரோப்பிய பட்டாணி உப்புக் கொத்தி

Updated on
1 min read

மேட்டூர்: குளிர்காலம் தொடங்கிய நிலையில், பண்ணவாடிக்கு அரிய வகை ஐரோப்பிய பறவை வந்துள்ளது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் முகாமிடுகின்றன.

இமயமலை, மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அதிகளவு பனி தாக்கம், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக, பறவைகள் மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து செல்கின்றன. அந்த வகையில், பண்ணவாடிக்கு அதிகளவிலான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், குளிர்காலம் தொடங்கிய நிலையில், ஐரோப்பாவிலிருந்து பல பறவைகள் வலசை வருவது தொடங்கியுள்ளது.

தற்போது, அரிய வகை பறவையான ஐரோப்பிய பட்டாணி உப்புக் கொத்தி பண்ணவாடிக்கு வருகை தந்துள்ளதை பறவை ஆர்வலர்களும், சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர் கழகத்தைச் சேர்ந்த செந்தில் குமார், ஷாஜன் ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.

தற்போது, வெளிநாட்டு பறவைகள் வருவது பறவை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குளிர்காலம் தொடங்கி விட்டால் ஐரோப்பியக் கண்டப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான பறவைகள் உணவுக்காகவும், காலநிலைகளுக்காகவும் மித வெப்பமண்டல நாடுகளை நோக்கி வருகின்றன.

சேலம் மாவட்டத்தின் முதல் பதிவாக ஐரோப்பிய பட்டாணி உப்புக் கொத்தி பண்ணவாடிக்கு வந்துள்ளது. சிறிய உடலமைப்பைக் கொண்ட ஒரு நீர்ப் பறவையாகும். இப்பறவை குளிர் காலங்களில் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளில் குளிர்கால வலசையாக வருகிறது.

இப்பறவையை பொதுவாக கடற்பகுதிகளில் மட்டும் வலசை காலங்களில் பார்க்க முடியும். ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து கடல் பகுதியை நோக்கி நீண்ட தூரம் வலசை வரும் போது இடையில் சில நாட்கள் நாட்டின் உள் பகுதிகளில் தங்கியிருந்து செல்லும். இப்பறவை கடலை நோக்கி செல்லும் வழியில் பண்ணவாடிக்கு வந்து இளைப்பாறிச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டுக்கு வருகைப் பதிவு மிகவும் குறைவு. கடற்கரைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரிய வகை நீர்ப் பறவையான ஐரோப்பிய பட்டாணி உப்புக் கொத்தி பண்ணவாடிக்கு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப் பறவையுடன் டன்லின் என்ற கடலோரப்பறவையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>ஐரோப்பிய பட்டாணி உப்புக் கொத்தி</p></div>
ரோலக்ஸ் யானை உயிரிழப்புக்கு ‘திடீர்’ இதய செயலிழப்பு காரணம் - உடற்கூராய்வில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in