

கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலருடன் உயிரிழந்து கிடக்கும் ‘ரோலக்ஸ்’ யானை. | படம்: ஜெ.மனோகரன் |
பொள்ளாச்சி: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் என்ற 50 வயதுடைய ஆண் யானை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வரகளியாறு முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டது.
பின்னர், ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, மானாம்பள்ளி வனச்சரகப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி நீர்நிலைக்கு அருகில் யானை உயிரிழந்து கிடந்தது. யானையின் சடலம் நேற்று முன்தினம் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: நீர்நிலைக்கு அருகில் குறைந்த சரிவு கொண்ட பகுதியில் சுமார் 25 மீட்டர் தொலைவுக்கு யானையின் கால் தடங்கள் வழுக்கி சென்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் யானையின் சடலம் இடது பக்கவாட்டு சாய்வில் மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம் வன கால்நடை மருத்துவ குழுவினர் நடத்திய பிரேத பரிசோதனையில் யானையின் உடலில் வெளிப்புறத்தில் கால்களில் சிராய்ப்பு காயம் காணப்பட்டது. உடலின் உட்புறத்தில், பெருமூளைப் புறணியில் மிதமான நெரிசலும், இதயத்தில் பெரிகார்டியம் தடித்தும் காணப்பட்டது.
மேலும் ரத்தக் கசிவுகளும், கல்லீரல் காப்ஸ்யூல் தடிமனாகவும், எளிதில் உரிக்கப்படாமல், வட்டமான எல்லைகளுடன் உறுதியான நிலைத்தன்மையுடன் காணப்பட்டது.
பிரேத பரிசோதனையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள தனுவாஸ் மத்திய பல்கலைக்கழக ஆய்வகம், மருந்தியல் விழிப்புணர்வு ஆய்வகம், மேம்பட்ட வன விலங்கு பாதுகாப்பு நிறுவனம், பிராந்திய தடயவியல் ஆய்வகம், கோவையில் உள்ள சக்கான் ஆய்வகம் ஆகியவற்றுக்கும், மாநிலத்திற்கு வெளியே உத்தர பிரதேசம் பரேலியில் உள்ள ஐவிஆர்ஐ ஆய்வகம், கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள கேரள வன வனவிலங்கு நோய் கண்டறியும் ஆய்வகம் ஆகியவற்றுக்கும் அனுப்பப்படும்.
ரோலக்ஸ் யானையின் இறப்புக்கு காரணம் திடீர் இதய செயலிழப்பு மற்றும் ஒரே நேரத்தில் ஹெபடைடிஸுடன் தொடர்புடைய ஹீமோபெரிகார்டியம் என தெரியவந்துள்ளது. இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.