

மேட்டூர்: மேட்டூர் அணையின் வலதுகரை பகுதியில் சுற்றித் திரிந்த அரிய வகை எறும்பு தின்னியை நீர்வளத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை, மான், கரடி, குரங்கு, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள், பறவையினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதேபோல், அரிய வகை வனவிலங்குகளான நீர்நாய்கள், எறும்பு தின்னி, அரிய வகை பறவையினங்கள் உள்ளன.
இதனிடையே, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிறுப்புகளை நோக்கி செல்கின்றன. இதனை வனத்துறையினர் கண்டறிந்து, மீட்டு மீண்டும் வனப்பகுதிகளில் விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான எறுப்பு தின்னி தென்படுவது மிக மிக அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த எறும்பு தின்னி பெரும்பாலும் சமவெளிகள், மலைகள் பகுதிகளில் தான் தென்படும்.
நீளமான உடலும், வாலும், கூர்மையான முகம் கொண்ட விலங்கு ஆகும். உடல் முழுக்க உள்ள செதில்கள் பாதுகாப்பு கவசமாகப் பயன்படுகிறது. தன்னை பாதுகாக்க குண்டு போல சுருட்டிக்கொள்ளும்.
இத்தகைய சிறப்புகளை கொண்ட எறும்பு தின்னி, இன்று அணையின் வலதுகரை பகுதியில் நீந்தி கொண்டு வந்த நிலையில், சிறிது நேரம் கழித்து நீந்தி கரைக்கு வந்தது. இதனை பார்த்த நீர்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் எறும்பு தின்னியை பாதுகாப்பாக மீட்டு பாலமலை வனப்பகுதியில் விட்டனர்.