

கொட்டாம்பட்டி அருகே உள்ள அருவிமலை.
மதுரை: கொட்டாம்பட்டி அருகே உள்ள அருவிமலையைப் பாதுகாக்கப் பட்ட பல்லுயிர் மரபுத் தலமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் பால்குடி கிராமத்தில் உள்ள அருவிமலை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இங்கு பழங்கால குகைத்தளம், கற்படுக்கைகள், 14-ம் நூற் றாண்டு கல்வெட்டுகள் கண்டறி யப்பட்டன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால குகைத் தளங்களும் கல் படுக்கைகளும் உள்ளன.
14-ம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த சுந்தரபாண்டியன் காலத்தில் வெட்டப்பட்ட பூரண கும்பம் பொறித்த சிறப்பு வாய்ந்த கல்வெட்டு அடிவாரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
மலை உச்சியில் 13-ம் நூற்றாண்டு பாண்டியர் கால சிவன் கோயிலின் அதிட்டானப் பகுதி மற்றும் படிக்கட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பால்குடி மற்றும் அருவிமலைப் பகுதியில் கற்திட்டை, கல்வட்டம் போன்ற இரும்புக்கால நினைவுச் சின்னங்கள் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மலையைப் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மரபுத் தலமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையில் உள்ள கல்வெட்டு.(கோப்பு படம்)
இதுகுறித்து க.புதூர், களப்பாறை, பால்குடி, முத்துக் கருப்பன்பட்டி பொதுமக்கள் கூறியதாவது: அருவி மலையில் சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் போன்ற தொல்லியல் சின்னங்களும், சிவன் கோயில், அருவிமலை கருப்பசாமி கோயில், ஆண்டி கோயில் போன்ற வழிபாட்டு தலங்களும், அருவி குளம், கருப்பாயூரணி, வெள்ளுத்து நீரரூற்று போன்ற நீர்நிலைகளும் உள்ளன.
மேலும், அழிவின் விளிம்பு நிலையில் உள்ள அரிய வகை சாம்பல் நிற தேவாங்குகள், பாலூட்டி வகை உயிரினங்கள், காட்டுயிர்கள், பறவைகள், ஊர்வன உயிர்கள், வண்ணத்துப் பூச்சிகள், மூலிகைத் தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. எனவே, அருவிமலையை ஆய்வுக்கு உட்படுத்தி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மரபுத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறினர்.