

வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி-பூச்சம்பட்டி இடையே வகுத்துமலை, வண்ணாத்திகரடு வனப்பகுதியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலத்தில் ஒளி, ஒலி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக வனவிலங்குகள் பாதுகாப்பாக கடந்துசெல்லும் மேம்பாலத்துடன் அமைக்கப்பட்டுள்ள வாடிப்பட்டி-தாமரைப்பட்டி வெளிவட்டச் சாலையால், போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாநகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மதுரை-திண்டுக்கல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையிலும் ரூ.1,024 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாடிப்பட்டி-தாமரைப் பட்டி இடையே (தேசிய நெடுஞ் சாலை எண் 744ஏ) 29.960 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள வெளிவட்டச் சாலை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த நான்கு வழிச்சாலையில் 2 மேம்பாலங்கள், 2 வாகன மேம்பாலங்கள், 2 வாகன சுரங்கப் பாதைகள், 5 இலகுரக வாகனச் சுரங்கப்பாதைகள், 4 சிறிய வாகன சுரங்கப்பாதைகள், 2 பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 4 பெரிய பாலங்கள், 29 சிறிய பாலங்கள், சீரான போக்குவரத்துக்காக ‘பகுதி கிளவர்லீஃப்' சந்திப்பும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வாகனங்களுக்காக 11.32 கி.மீ நீளத்துக்கு அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தலா ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு கேமரா வீதம் 30-க்கும் மேற்பட்ட அதிதுல்லியமான கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி-தாமரைப்பட்டி வெளிவட்டச் சாலையில் செல்லும் வாகனங்கள்.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரை அலகு திட்ட இயக்குநர் அலுவலகத்தினர் கூறுகையில், மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலையால் பயண நேரம் குறையும், வாகனங்களின் எரிபொருள் செலவும் குறையும். அலங்காநல்லூர், நத்தம், அழகர்கோவில் சாலைகளுக்கும் இணைப்புச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, என்றார்.
இதனால் மதுரை நகருக்குள் தத்தனேரி, விளாங்குடி, பரவை, சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் மதுரையின் வடபகுதிகளிலிருந்து கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், பழநி, கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்களின் பயண நேரம் குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு
வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி, பூச்சம்பட்டி இடையே வகுத்துமலை,வண்ணாத்திகரடு வனப்பகுதியின் நடுவில் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
அவை பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் தமிழக அரசின் வனத்துறையிடம் அனுமதி பெற்று ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலம் தமிழகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தில் கடந்து செல்லும்போது, வாகனங்களின் இரைச்சல் சத்தமின்றியும், இரவில் ஒளி வெளிச்சமின்றியும் வனவிலங்குகள் கடந்து செல்லும் வகையில் ஒலி, ஒளி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ்ப்பகுதியிலிருந்தும் விலங்குகள் சாலைக்கு வராமல் கான்கிரீட் சுவர்கள், கம்பி வேலிகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளன.