

கடும் வெப்பம் காரணமாக மேலக்கரந்தை பகுதியில் பனை மரங்கள் கருகி உள்ளன.
கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டாரத்தில் கடந்த 6 மாதங்களாக மழையில்லாததால் நிலம் இறுகிப் போய் விட்டது. எல்நினோ வெப்பம் தாக்கத்தால் வேம்பு, பனை மரங்கள் கருகி வருகின்றன. இதனால், இந்தாண்டு ராபி பருவத்தில் பயிர் செய்யவா அல்லது வேண்டாமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப் பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தாறு, புதுக்கோட்டை போன்ற 12 வட்டாரங்களில் ஒரு சில பகுதிகள் தவிர பெரும்பாலான கிராமங்களில் மானாவாரி விவசாயம் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் மழை பெய்தது. அதன் பின்னர் ஏப்ரல், மே மாதத்தில் கோடை மழை பெய்யவில்லை. கோடைமழை பெய்தால், அந்த ஈரத்தை பயன்படுத்தி நிலங்களை நன்கு உழவு செய்து விடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, ஒரு சொட்டு மழை கூட 6 மாத காலமாக பெய்யவில்லை. இதனால், கோடை உழவு செய்யவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் வாரத்தில் மக்காச்சோளம் விதையை விவசாயிகள் ஊன்றி விடுவார்கள். முதல் பருவ மழை பெய்தவுடன் உளுந்து, பாசி, கம்பு, பருத்தி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்கள் அடுத்தடுத்து சாகுபடி தொடங்கும். கோடை உழவு செய்யாததால், இப்பணிகளும் நடைபெறவில்லை.
அது மட்டுமின்றி கடந்த 3 மாத காலமாக எல்நினோ தாக்கத்தால், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வீடுகளில் வசிக்க முடியவில்லை. வறட்சியைத் தாங்கி கம்பீரமாக நிற்கக்கூடிய பனை மரங்களிலும் அதன் குருத்து காய்ந்து விட்டது. மழையின்றி நிலங்கள் இறுகிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. நிலம் பாழ்பட்டுவிடக் கூடாதே என, சில இடங்களில் விவசாயிகள் நிலங்களில் டிராக்டர் மூலம் உழவு செய்கின்றனர்.
நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன
இதுகுறித்து, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: கடும் வெப்பம் காரணமாக நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு பாளம் பாளமாக வெடிப்பு கண்டுள்ளன.
நீர்நிலைகள் வற்றியதால் கால்நடைகளுக்கு தண்ணீரும் இல்லை. மேய்ச்சலும் இல்லை. கிராமப்புறங்களில் புழக்கத்துக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
நிலங்கள் பாழ்பட்டுவிடக்கூடாது என இறுகிய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு மேற்கொள்ளும் விவசாயி.
ஆண்டுதோறும் ஆவணி மாதமே விதைகளை ஊன்றிவிடுவோம். அவ்வப்போது தூறல் மழை பெய்து விதைகள் முளைத்து விடும்.
அதன் பின்னர் புரட்டாசி மாதம் பருவ மழைக்கு பயிர்கள் நன்கு வளர்ந்துவிடும். ஆனால், இந்தாண்டு தற்போது வரை எந்தவித விவசாயப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. எல்நினோ வெப்பம் என்ன செய்ய காத்திருக்கிறதோ? என கவலையில் உள்ளோம்.
முழுமையாக உதவ வேண்டும்
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக எங்களை அச்சுறுத்தி வரும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க அரசு முடிவு எடுக்கவில்லை. தற்போது, எல்நினோ வெப்பத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசு உதவ வேண்டும். கிராமப்புறங்களில் குடிநீருக்கு முன்னுரிமை தர வேண்டும். தற்போதைய வெப்பத்தை தாங்க முடியாமல் பனை மரங்கள் கூட காய்ந்து வருகிறது.
வேப்ப மரத்தில் இருந்து உதிரும் வேப்பமுத்து கூட கடந்தாண்டு அளவுக்கு வரத்து இல்லை. பருவ மழை மிகவும் பின்தங்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். மாற்றுப்பயிர் சாகுபடிக்கான வழிகாட்டுதலை வேளாண்மை துறை அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழுமையாக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.