

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக நவீன தானியங்கி இரும்புக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவான 5.43 லட்சம் ஹெக்டேரில், 1.45 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் 115 காப்புக்காடுகள் உள்ளன. இங்கு யானைகள், மான்கள், மயில்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
வனப்பகுதியையொட்டிய விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், ராகி, வாழை, நிலக்கடலை, கம்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றிகள், நிலத்தைத் தோண்டி பயிர்களை வேருடன் அழித்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன தானியங்கி இரும்புக்கூண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களைத் தொடர்ந்து, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் இந்தக் கூண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட எல்லையில் உள்ள காளிகோவில் துரை ஏரி அருகே கூண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் சீத்தாராமன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது: காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமுள்ள மாவட்டங்களில் இத்தகைய நவீன கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூண்டில், காட்டுப்பன்றிகளைப் பழக்கப்படுத்துவதற்காகச் சில நாட்கள் கதவுகள் திறந்து வைக்கப்படும். உள்ளே நிலக்கடலை, கேரட், பீன்ஸ், மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனங்கள் வைக்கப்படும். காட்டுப்பன்றிகள் தொடர்ந்து வந்து உணவு உண்ணப் பழகிய பிறகு, அவற்றைப் பிடிக்கும் பணி தொடங்கும்.
கூண்டின் அருகே செல்லாமல் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்தே ரிமோட் மூலம் கதவை இயக்கி மூட முடியும். கூண்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செல்போன் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், காட்டுப்பன்றிகள் கூண்டுக்குள் நுழைவதை நேரலையில் கண்காணித்து, சரியான நேரத்தில் கதவை மூட முடியும். மின்சாரத் தேவைக்காக சோலார் பேனல் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூண்டில் பிடிபடும் காட்டுப்பன்றிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்படும். இந்தக் கூண்டை முறையாகக் கையாள்வது குறித்து, தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வனச்சரக அலுவலகத்தில் வன ஊழியர்களுக்கும், பிற வனச்சரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, என்றனர்.