

மேட்டூர் அணையில் பச்சை படலமாக மாறிய தண்ணீர், துர்நாற்றத்தை கட்டுப்படுத்த திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் திரவ கலவை தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
மேட்டூர்: மேட்டூர் அணையில் பச்சையாக மாறிய தண்ணீர், துர்நாற்றத்தை கட்டுப்படுத்த திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் திரவ கலவை தெளிக்கப்பட்டது. மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், அணைக்கு நீர்வரத்தும் சற்று அதிகரித்து காணப்படுவதால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையில் விவசாயம் செய்வதற்காக பயன்படுத்திய ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்து, அழுகிய பயிர்கள் செடி, கொடிகள் பல வகையான தாவரங்கள் ரசாயன மாற்றம் அடைந்து பச்சை நிற படலங்களாக நீர்த்தேக்கம் முழுவதும் மாறி வருகிறது. வெயில் தாக்கம் ஏற்படும் போது நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், பெங்களூருவில் இருந்து கழிவுகள் தண்ணீரில் கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது, நிறம் மாறிய தண்ணீரால், தங்கமாபுரிபட்டினம் மற்றும் கவிபுரம், சேலம்கேம்ப், பெரியார் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் அணை நீர்த்தேக்க பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேட்டூர் அணையில் தேங்கும் கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக நீர்வளத்துறையினர் படகு மற்றும் பரிசல் மூலமாக திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் திரவ கலவையை தெளித்து துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி வருகிறனர்.
இவ்வாறு தெளிக்கப்படும் நுண்ணுயிர் கலவையால் நன்மை செய்யும் நுண்ணுயிர் பன்மடங்கு பெருக்கமடைந்து ஆல்கே எனும் பாசிகளை முழுமையாக கட்டுப்படுத்தி இப்பகுதியில் வீசும் துர்நாற்றம் படிப்படியாக குறையும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.