

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் தவெக-வில் இணைய உள்ளதாக பரவிய தகவல் குறித்து, விட்டில் பூச்சியை நம்பி கலங்கரை விளக்கை விட்டு எப்படி செல்வேன் என முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் குறிப்பிட்டுள்ளார்.
தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன் இணைந்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்டோர் விரைவில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரில் ஒருவரான மாபா.பாண்டியராஜன் விருதுநகர் தொகு தியை குறிவைத்து அதிமுகவின் தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
அதோடு, விருதுநகர் தொகுதியில் விநியோகம் செய்ய அவரது படத்துடன் அதிமுக சார்பில் காலண்டர் வழங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தவெகவில் இணைவதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தனது கண்டனத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், த.வெ.க.வுக்கு ஓட தயாராகும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்ற தகவல் முற்றிலும் தவறானது.
அதில் எனது ராஜவர்மன் என எனது பெயரை வெளியிட்டிருப்பது எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.
விட்டில் பூச்சியை நம்பி கலங்கரை விளக்கை விட்டு எப்படி செல்வேன்? முன்னாள் அமைச்சர் ஒருவரின் தூண்டுதலால் இச்செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை மறைமுகமாக சாடியுள்ளார். இதனால் விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.