

கூடலூர்: நீலக்குறிஞ்சி மலர்கள் மலையெங்கும் பூத்துக்குலுங்கி நீல நிறத்தில் காட்சியளிப்பதாலேயே நீலகிரி என்று காரணப்பெயரை கொண்டிருக்கிறது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி முதல் 12, 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியினங்கள் வரை உள்ளன. வன வளத்தின் குறியீடாக குறிஞ்சி மலர்கள் கருதப்படுகின்றன.
இந்நிலையில், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தற்போது ஒட்டுமொத்தமாக குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. கண்களுக்கு எட்டும் தொலைவு வரை நீலக்கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும் குறிஞ்சி மலர்களை நோக்கி தேனீக்கள் படையெடுத்து வருகின்றன.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில், குறிப்பிட்ட பருவத்தில்தான் இந்தப் பகுதியில் பூத்துள்ளனவா அல்லது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.