

கொடைக்கானலில் பசுமையான புல்வெளியில் வெண்பட்டு போர்த்தியது போல் காணப்படும் உறைபனி.
கொடைக்கானல்: கொடைக்கானலில் நடுங்க வைக்கும் உறைபனி, இரவில் வாட்டும் கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் வழக்க மாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி காலமாக இருக்கும்.
நடப்பாண்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பரவலாக மழை பெய்ததால் உறைபனி குறைந்து அடர் பனிமூட்டம் நிலவியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது.
பகல் நேரத்தில் 16 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 10 முதல் 12 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையும் நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் உறைபனி படர்ந்து புல்வெளிகளில் வெண்பட்டு போர்த்தி காஷ்மீர் போல காட்சி அளிக்கிறது.
கொடைக்கானல் மேல்மலை, ஏரிச்சாலை, பாம்பார்புரம், பிரையன்ட் பூங்கா மற்றும் ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை உறைபனி காணப்பட்டது.
திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி படர்ந்து மூடி இருந்தது. ஏரியின் மேல்பகுதி தண்ணீரில் படர்ந்திருந்த பனிப்படலம் வெயில் பட்டவுடன் ஆவியாக மாறி வெளியேறும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் பலர் கண்டு ரசித்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் துக்காக கொடைக்கானலில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த சூழலை மிகவும் ரசிக்கின்றனர். அதே சமயம், விவசாய நிலங்களில் பனிப்பொழிவால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.