

பனியில் இருந்து மலர்ச் செடிகளை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உறை பனியில் இருந்து பாதுகாக்க மலர்ச் செடிகளுக்கு பிளாஸ்டிக் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் கடும் உறை பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் தட்பவெப்பநிலை 2.9 டிகிரி செல்சியஸ் பதிவானது.
கோடை சீசனில் மலர்க் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா, தேயிலைப் பூங்கா, ரோஜாப் பூங்கா உட்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நர்சரிகளில் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போது பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மலர் நாற்றுகளைப் பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனியின் தாக்கம் எப்போதும் அதிகமாக காணப்படும்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் வெண்பனி மூடி காட்சியளித்த புல்வெளி
தற்போது அலங்காரத் தாவரங்கள் மற்றும் மலர்ச் செடிகளை பிளாஸ்டிக் போர்வையைக் கொண்டு ஊழியர்கள் மறைத்து வருகின்றனர். காலை, மாலையில் தொழிலாளர்கள் தண்ணீர் தெளித்து மலர்ச் செடிகளை, பனியில் கருகாமல் காத்து வருகின்றனர்.
பூங்காவில் உள்ள புல் மைதானங்கள், கருகாமல் இருக்கும் வகையில் ‘பாப் அப்’ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.