தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேருடன் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம்
தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேருடன் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் அடுத்த பருவமழை தொடங்கும் முன்பு சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், இப்பணியை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமனம் செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 11 ஆண்டுகளுக்கு முன்பு பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் செழுமை கருவூலம் என்ற பெயரில் உள்ளூர் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிக்காக தனி இணையதளம் தொடங்கி அதில் அனைத்து தகவல்களையும் பராமரிக்க வேண்டும். மரங்கள் அகற்றப்பட்டு, அதில் பிற மரங்கள் நடப்பட்டது தொடர்பான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மரக்கன்றுகளை மீண்டும் நடுவதற்கு மாநில அளவில் வனப் பாதுகாவலர் மற்றும் வேளாண்மை இயக்குநரைக் கொண்ட குழு அமைக்கப்படும். அனைத்துதரப்புக்கும் பயனபெறும் வகையிலான மரங்களாக இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சீமைக் கருவே மரங்களை ஏலம் விடும் பணியை 4 மாதங்களில் முடிக்க வேண்டும். அகற்றும் பணியை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். கருவேல மரங்கள் இல்லாத பகுதிகளாக அறிவிக்கும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். இதேபோல் தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை 30 நாட்களில் அகற்ற வேண்டும். தவறினால் அதிகாரிகள் அகற்றி கட்டணம் வசூலிக்க வேண்டும்.

அரசுத் துறைகளுக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளடங்கிய பணிக்குழுக்கள் அமைக்க வேண்டும். அகற்றும் பணிகளை மேற்பார்வையிட சென்னை உயர் நீதிமன்ற பகுதிக்கு உட்பட்ட வடக்கு மாவட்டங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசனும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட தென்மாவட்டங்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வமும் நியமிக்கப்படுகின்றனர்.

அடுத்த பருவமழை தொடங்குவதற்கு முன்பே அகற்றும் பணியை முடிக்க வேண்டும். அப்போதுதான் பருவமழைக் காலத்தில் உள்ளூர் தாவர இனங்களை நட்டு வளர்க்க முடியும்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்.17-க்கு தள்ளிவைத்தனர்.

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேருடன் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
சீமைக் கருவேல மரம் அகற்றுதல்: முழு மனதுடன் செயலாற்ற வேண்டும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in