அதிக குட்டிகளுடன் சுற்றும் பெண் யானை கூட்டம் - ஆய்வு செய்ய ஓசூர் வனத்துறையினர் முடிவு

கெலமங்கலம் அருகே அதிக குட்டிகளுடன் கூட்டமாக சுற்றும் பெண் யானைகள்.                                      (கோப்பு படம்)

கெலமங்கலம் அருகே அதிக குட்டிகளுடன் கூட்டமாக சுற்றும் பெண் யானைகள். (கோப்பு படம்)

Updated on
2 min read

ஓசூர்: கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழக வனப்பகுதிக்கு வலசை வந்துள்ள யானைக் கூட்டத்தில் வழக்கத்தை விட அதிக குட்டிகளுடன் பெண் யானைகள் சுற்றி வருகின்றன. இது தொடர்பாக ஓசூர் வனக்கோட்ட வனத்துறையினர் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

கூட்டமாக வாழும் தன்மை கொண்ட யானை கூட்டத்தில் ஒன்று முதல் நூற்றுக்கணக்கான யானைகள் இருக்கும். இக்கூட்டத்தை வயதான பெண் யானை வழிநடத்தும். பொதுவாக குட்டிகளுடன் பெண் யானைகள் இருக்கும்.

இவை உணவுக்காக மட்டுமின்றி இனபெருக்கத் துக்காகவும் வலசை பயணம் மேற்கொள்வது வழக்கம். கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பரில் தமிழக வனப்பகுதியான ஓசூர் வனக்கோட்ட பகுதிக்கு யானைகள் வலசை பயணம் மேற்கொண்டு, ஆந்திர வனப்பகுதிக்கு சென்று மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வந்த பாதையில் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி செல்லும்.

யானைகளின் வலசை பாதைகளில் குவாரிகள், விளை நிலங்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலசை யானைகள் தங்கள் வழித்தடத்தில் செல்ல முடியாமல் பரிதவித்து வருவதோடு, வலசை பாதையை ஒட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பெரும் பயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர், நவம்பரில் தமிழக வனப்பகுதிக்கு 130-க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வந்தன. இவை தொடர்ந்து தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஓசூர் அருகே சானமாவு, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் சுற்றி வருவதோடு, விளை நிலங்களில் பயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தின. இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்தனர்.

தற்போது, 80-க்கும் மேற்பட்ட வலசை யானைகள் ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதியில் பல குழுக்களாக பிரிந்து சுற்றி வருகின்றன. வழக்கமாக கூட்டமாக சுற்றும் யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகள் இருக்கும். இந்தாண்டு, வழக்கத்துக்கு மாறாக பெண் யானைகள் ஆண் யானை களிடமிருந்து பிரிந்து அதிக குட்டி யானைகளுடன் சுற்றி வருகின்றன.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: யானைகளுக்கு அபாரமான மோப்ப சக்தி உண்டு. 20 கி.மீ தூரத்திலிருந்தே நீர் இருப்பதை மோப்பம் பிடித்துக் கண்டறியும் திறன் உண்டு.

யானைகள் குடும்பத்தில் பெண் யானைகள் தலைவியாக இருந்து, உணவு தேடுவது, ஆபத்துகளை எதிர்கொள்வது உள்ளிட்ட சூழ்நிலையில் கூட்டத்தை வழிநடத்தும். ஆண் யானைகள் வளர வளர, கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றுவிடும். ஆண் யானைகள் தனியாகவோ அல்லது சிறு சிறு கூட்டங்களாகவோ வாழத் தொடங்கும்.

இந்தாண்டு தமிழகத்துக்கு வலசை வந்த யானைகளில் ஆண், பெண் மற்றும் குட்டிகள் கூட்டமாக வந்தாலும் இதில், 20-க்கும் மேற்பட்ட பெண் யானைகள் ஆண் யானைகளிடமிருந்து பிரிந்து அதிக குட்டிகளுடன் தனிக் குழுவாக சுற்றி வருகின்றன.

கர்நாடக மாநில வனப்பகுதியில் பெண் யானைகள் அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈன்றுள்ளதால், அதிக குட்டிகளும் வலசை வந்துள்ளன. மேலும், தங்களின் வழித்தடத்தை குட்டி யானைகள் தெரிந்து கொள்ள பெண் யானைகள் அதிக குட்டிகளுடன் வந்திருக்கலாம். வழக்கத்திற்கு மாறாக அதிக குட்டிகளுடன் பெண் யானைகள் சுற்றுவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>கெலமங்கலம் அருகே அதிக குட்டிகளுடன் கூட்டமாக சுற்றும் பெண் யானைகள்.                                      (கோப்பு படம்)</p></div>
சேலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in