

கோப்புப் படம்
இமயமலையின் உறைபனிச் சிகரங்கள் அமைதியாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், அவை முன்னெச்சரிக்கையின்றி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் ‘பனி வெடிகுண்டுகள்’. உத்தராகண்டின் அலக்நந்தா மலைச்சரிவுகளில் மட்டும் 219 தொங்கும் பனிப்பாறைகள் எந்த நொடியிலும் தங்களின் பிடியை இழக்கத் தயாராக இருக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகச் சராசரியை விட 2 மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வரும் இமயமலையில், இப்போது நிலவி வருவது ஒரு ‘சங்கிலித் தொடர் பேரிடர்’ சூழல். பார்ப்பதற்கு அழகிய உறைபனிச் சிற்பங்கள் போல இவை காட்சியளித்தாலும், புவி வெப்பமயமாதலால் தங்களின் ஒட்டும் தன்மையை ஒவ்வொரு நொடியும் இழந்து வருகின்றன.
தொங்கும் பனிப்பாறைகள் உடைந்து விழுவதும், அதனால் தற்காலிக அணைகள் உருவாகிப் பின் ‘பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம்’ (GLOF) ஆக மாறுவதும் வெறும் இயற்கைச் சீற்றமல்ல; முறையற்ற உள்கட்டமைப்பு வளர்ச்சியால் மனிதன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியம் என்று சூழலியல் ஆர்வலர்கள் காட்டமாக கூறுகின்றனர்.
தொங்கும் பனிப்பாறை என்றால் என்ன?
இமயமலையின் செங்குத்தான மலைச்சரிவுகளில், பள்ளத்தாக்கின் தரைப்பகுதியை அடையாமல் மலையில் உறைந்து ஒட்டிக்கொண்டிருக்கும் பனிப்பாறைகளே ‘தொங்கும் பனிப்பாறைகள்’. புவி வெப்பமயமாதலால் இந்த ஒட்டும் தன்மை தளரும்போது, பெருந்திரளான பனியும் பாறைகளும் முன்னறிவிப்பின்றி உடைந்து கீழே விழுந்து மாபெரும் பனிச்சரிவுகள் உருவாகின்றன.
ஆய்வு எச்சரிக்கும் பேரபாயம்:
புவனேஷ்வரில் உள்ள ‘அஷிம் சத்தார் ஆஃப் தி ஸ்கூல் ஆஃப் எர்த், ஓசன் அண்ட் க்ளைமேட் சயின்ஸ்’ மற்றும் பெங்களூரு ‘இந்திய அறிவியல் கழகம்’ (IISc) இணைந்து நடத்திய ஆய்வில் பின்வரும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:
> அலக்நந்தா பகுதியில் உள்ள 219 தொங்கும் பனிப்பாறைகள் 3.5 முதல் 71.7 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன.
> அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய பனிச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
> 2000-ஆம் ஆண்டை விட 2030-ஆம் ஆண்டில் இப்பகுதியில் உள்ள கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் 120%-க்கும் மேலாக பெரும் பேரிடரில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளது.
> அதிக ஆபத்துள்ள பனிப்பாறைகளைக் கண்காணித்து, தாழ்வான பகுதிகளில் சரியான நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலை மேற்கொள்வது அவசியம்.
உடைந்தால் ஏற்படும் பேரழிவு:
இமயமலையில் இருக்கும் 219 ஆபத்தான பனிப்பாறைகள் உடைந்தால், அது சங்கிலித் தொடர் போன்ற பேரழிவை ஏற்படுத்தும். பனிப்பாறை உடைந்து விழும்போது, புவியீர்ப்பு விசையின் காரணமாக ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள பனி மற்றும் பாறைக்குவியல்கள் மலையிலிருந்து வேகமாக கீழ்நோக்கி உருளும். அதோடு வண்டல் மண்ணையும் சேகரித்துக்கொண்டு பெரும் பாறைச்சேறாக மாறி, தனது அழிக்கும் சக்தியை மேலும் அதிகரிக்கும்.
இவை குறுகலான ஆற்றுப் பள்ளத்தாக்குகளை மறித்து, சில நிமிடங்களில் தற்காலிகச் செயற்கை அணைகளை உருவாக்குகின்றன. நீர்மட்டம் உயர்ந்து அந்த அணைகள் உடையும்போது, சுனாமி போன்ற பேரலைகள் உருவாகி ஆற்றுப்படுகைகளையும் ஊர்களையும் அழித்துவிடுகின்றன.
சிக்கிமில் ஆபத்தான 40 பனிப்பாறை ஏரிகள்: சிக்கிமில் கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் ஆபத்தானவை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அறிவித்துள்ளது. இதில் 16 ஏரிகள் வகைப்படுத்தப்பட்டு, அவற்றில் 7 ஏரிகள் மிக அதிக ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து சிக்கிம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் சந்தீப் தாம்பே தெரிவித்த தகவல்கள்: ஏரியின் ஆழம், நீரின் அளவு, பனிப் படிவுகளின் நிலைத்தன்மை மற்றும் நிலச்சரிவு அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன. பனிப்பாறை உருகுவதால் நீரின் அளவு உயர்கிறதா என்பதைக் கண்காணிக்கச் சிறப்பு சென்சார் கருவிகளையும் பொருத்தியுள்ளோம்.
ஏரி உடைந்தால், செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இந்த சென்சார்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பி, கீழ்ப்பகுதி மக்களை விரைவாக அப்புறப்படுத்த உதவும். அனைத்து பனிப்பாறை ஏரி வெடிப்புகளையும் எங்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால், ஆபத்துகளையும் அபாயங்களையும் முன்கூட்டியே உணர்ந்து மக்களை எச்சரிக்க நிச்சயமாக முடியும்.
இயற்கை மற்றும் மனித காரணி:
உலகச் சராசரியை விட இமயமலைப் பனிப்பாறைகள் இரு மடங்கு வேகத்தில் உருகி தொங்கு பனிப்பாறைகளாக மாறுகின்றன. இவை ஏற்கெனவே உள்ள பனிப்பாறை ஏரிகளில் விழும்போது ஏரிகள் உடைந்து பேரழிவு ஏற்படுகிறது.
நதிக்கரைகளில் கட்டப்படும் கட்டடங்கள், விடுதிகள், தடையற்ற சுற்றுலா மற்றும் ஆக்கிரமிப்புகள் வெள்ளச் சேதத்தைப் பல மடங்கு உயர்த்துகின்றன. அணைகளுக்காகப் பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பது புவியியல் அமைப்பை மேலும் பலவீனமாக்குகிறது.
இந்தியாவின் தற்போதைய தயார் நிலை:
தொங்கும் பனிப்பாறை எந்த நொடியில் உடையும் என்பதைக் கணிப்பது மிகக் கடினம் என்றாலும், அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை:
> அருணாச்சல பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்குப் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத் தடுப்புக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
> பள்ளத்தாக்கு மக்களுக்குச் சில நிமிடங்களிலேயே எச்சரிக்கைச் செய்தி சென்றடையும் தொழில்நுட்பம் தொடக்க நிலையில் உள்ளது.
> இஸ்ரோ மற்றும் வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் (WIHG) ஆகியவை செயற்கைக்கோள் மூலம் ஏரிகளைக் கண்காணிக்கின்றன.
> சிக்கிம் தெற்கு லோனாக் ஏரி போல, ஆபத்தான ஏரிகளிலிருந்து குழாய்கள் மூலம் நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது.
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
சென்சார் கருவிகள்: ஆறுகளில் தானியங்கி நீர்மட்ட மற்றும் நில அதிர்வு சென்சார்களை நிறுவி, அபாய சைரன்கள், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு உடனடி எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
புவியியல் ஆய்வுகள்: பெரிய அணைகள், சுரங்கப் பாதைகள் கட்டுவதற்கு முன் தீவிரப் புவியியல் ஆய்வுகளையும் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கட்டாயமாக்க வேண்டும்.
சர்வதேசக் கூட்டுறவு: இமயமலை நதிகள் எல்லை கடந்து பாய்வதால் இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் சீனா இடையே பனிப்பாறை உருகுதல், வெள்ளம் மற்றும் நில அதிர்வு குறித்த கண்காணிப்புத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் அவசியம்.