

இயற்கையின் சமநிலையைக் குலைத்து மனிதர்கள் வளிமண்டலத்தில் பரவவிட்டிருக்கும் பசுமை இல்ல வாயுக்களின் விளைவு இன்று பருவநிலை மாற்றமாக விஸ்வரூபம் எடுத்து மிரட்டுகிறது.
கோடை காலங்களில் வெயில் கடுமையாக சுட்டெரிப்பதும், மழை பொய்த்து விவசாயம் சிதைவது, ஒருபுறம் தேவைக்கு அதிகமாக மழை பெய்து பயிர்களை அழிப்பது, கடலோர கிராமங்கள் கடலுக்குள் மூழ்குவது, பனிப்பாறைகள் உருகி அசுரத்தனமாக வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து அழிவை உண்டாக்குவது எல்லாம் வெறும் இயற்கைச் சீற்றங்கள் இல்லை. மனிதன், இயற்கைக்கு எதிராகச் செய்த தவறுகளுக்கான விளைவுகளே.
சமநிலையை இழக்கும் பூமி:
வளிமண்டலத்தைச் சிறை பிடித்திருக்கும் பசுமை இல்ல வாயுக்கள், ஒட்டு மொத்த பூமியையும் கொதிக்க வைத்துள்ளன. வளர்ச்சியின் உபபொருளாக உருவெடுத்த கார்பன் உமிழ்வால் ஒருபுறம் வல்லரசுகள் பொருளாதார வளர்ச்சியைத் துரத்த, மறுபுறம் அதற்கான கொடூர விலையைக் கொடுப்பது வளரும் நாடுகளும், எளிய மக்களும்தான்.
‘இது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமில்லை; மனிதகுலத்தின் வாழ்வா சாவா போராட்டம்’ என்பதை உலக நாடுகள் உணரும் தருணம் இது. அரசுகளும் மக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? பூமியைக் காக்கும் கடமையில் நாடுகளின் உண்மையான பொறுப்பு என்ன? இதோ ஒரு தெளிவுப் பார்வை.
பசுமை இல்ல வாயுக்கள் & புவி வெப்பமயமாதல்:
‘புவி வெப்பமயமாதல்’ என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இதை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் முன், பசுமை இல்ல வாயுக்கள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
சூரியனிலிருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சை உறிஞ்சும் பூமி, அதை மீண்டும் விண்வெளிக்கு அகச்சிவப்புக் கதிர்களாகப் பிரதிபலிக்கும். ஆனால், வளிமண்டலத்தில் உள்ள சில குறிப்பிட்ட வாயுக்கள் இந்த வெப்பத்தை வெளியேற விடாமல் சிறைபிடித்து வைத்துக்கொள்கின்றன. இவையே பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும்.
இயற்கையான பசுமை இல்ல வாயுக்கள் இல்லையெனில் பூமியின் வெப்பநிலை சுத்தமாகக் குறைந்து அனைத்தும் பனிக்கட்டியாக மாறும். ஆனால், மனிதர்களின் தொழில்புரட்சி, காடழிப்பு மற்றும் எரிபொருள் பயன்பாட்டால் செயற்கையாக அதிகரிக்கும் வாயுக்கள் வளிமண்டலத்தை ஒரு திரைபோல மூடி, புவி வெப்பமயமாதலை (Global Warming) ஏற்படுத்துகின்றன.
பசுமை இல்ல வாயுக்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது கார்பன் டை ஆக்சைடு (73.8%) ஆகும். அதைத் தொடர்ந்து மீத்தேன் (17.6%), நைட்ரஸ் ஆக்சைடு (5.3%), ஃப்ளோரினேட்டட் வாயுக்கள் (3.3%) மற்றும் நீராவி ஆகியவை இடம்பெறுகின்றன.
31-வது பருவநிலை உச்சி மாநாடு (COP31):
ஐக்கிய நாடுகள் சபையின் 31-வது சர்வதேச பருவநிலை உச்சிமாநாடு துருக்கியின் அந்தாலியா நகரில் நவம்பர் 9-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 20-ம் தேதி வரை நடக்கும் இந்த உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தைகளுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
முக்கிய நோக்கம்:
பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை மதிப்பீடு செய்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது குறித்த உறுதியான கொள்கைகளை வகுத்தல்.
முக்கிய இலக்குகள்:
வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதை உறுதி செய்தல்; கழிவுகளை மறுசுழற்சி செய்து கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் 2035-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டைப் பலமடங்கு அதிகரித்தல்.
அதிர வைக்கும் கார்பன் உமிழ்வும் பேரழிவுகளும்:
ஐரோப்பிய ஆணையத்தின் (JRC) அறிக்கைப்படி, 2025-இல் மட்டும் 54.10 பில்லியன் டன் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இது 1990-ஆம் ஆண்டை விட 68.5 சதவீதம் அதிகமாகும். 2026-ஆம் ஆண்டில் மட்டும் தீவிர வானிலை மாற்றங்களால் உலகளவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்; லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மட்டும் வெப்ப அலைகள், வறட்சி, காட்டுத்தீ போன்றவற்றால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் கூடுதலாக 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்; 2.20 லட்சம் மக்கள் பிரான்ஸிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இமயமலையில் பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர்; சீனாவில் 5,600 பேரைக் காணவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.
சீனாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பவி (Bavi) புயலால் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்; மேசக் புயலால் 171 பேர் உயிரிழந்தனர்.
அதிகமாக கார்பனை வெளியேற்றும் துறைகள்:
கடந்த 1970-களில் இருந்த அளவை விட இரு மடங்கு பசுமை இல்ல வாயுக்கள் தற்போது வெளியேற்றப்படுகின்றன. 23 பில்லியன் டன் என்ற நிலையிலிருந்து, 2025-இல் அது 54.10 பில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
மின்சாரம் மற்றும் வெப்ப உற்பத்தி (30%):
2025-இல் கார்பன் வெளியேற்றத்தில் 30 சதவீதம் அனல் மின்சார தயாரிப்பில் இருந்தே வந்துள்ளது. குறிப்பாக, வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகரித்த மின் தேவையே இதற்குக் காரணமாகும்.
தொழில்துறை (21%):
உற்பத்தித் துறை மற்றும் சுரங்கத் தொழில்களில் இருந்து இது உமிழப்படுகிறது. சிமெண்ட், உலோகம் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் வாயுக்களும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
போக்குவரத்துத் துறை (16%):
கார்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றப்படுகிறது. இந்த மூன்று துறைகளும் உலக கார்பன் வெளியேற்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கின்றன.
வேளாண்மைத் துறை (12%), எரிபொருள் அகழ்வு நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பிரித்தெடுத்தல் (11%), கட்டிடங்கள் கட்டுவது (6.6%), கழிவு மேலாண்மை (3.6%).
அதிக வாயுவை வெளியிடும் நாடுகள்:
2025-இல் உலகளவில் அதிகமான பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றியதில் முதலிடத்தில் இருப்பது சீனா (29.5 சதவீதம் - 16 பில்லியன் டன்) ஆகும். அதைத் தொடர்ந்து அமெரிக்கா (11.1 சதவீதம் - 6 பில்லியன் டன்) மற்றும் இந்தியா (8.3 சதவீதம் - 4.51 பில்லியன் டன்) ஆகிய நாடுகள் உள்ளன.
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகள் சேர்ந்து 5.8 சதவீதம், ரஷ்யா 4.8 சதவீதம், இந்தோனேசியா 2.5 சதவீதம், பிரேசில் 2.4 சதவீதம், ஈரான் 2.1 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன.
2000-ஆம் ஆண்டுகளுக்குப் பின்புதான் சீனாவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 18-வது நூற்றாண்டில் அமெரிக்காதான் பெரும்பங்கு கார்பனை வெளியேற்றி, வரலாற்று ரீதியாக 23.5 சதவீதம் பங்களிப்பைச் செய்துள்ளது. அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் சீனாவின் வரலாற்றுச் பங்களிப்பு 15.4 சதவீதம் மட்டும்தான் என ‘குளோபல் கார்பன் பட்ஜெட்’ தெரிவிக்கிறது.
சீனா வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களில் 42 சதவீதம் எரிசக்தி துறை மூலமாகவும், 31 சதவீதம் தொழில்துறை மூலமாகவும், 9.5 சதவீதம் எரிபொருள் உற்பத்தி மூலமாகவும் வெளியேறுகிறது.
அமெரிக்கா போக்குவரத்துத் துறைகள் (குறிப்பாக கார்கள், டிரக்குகள்) மூலமாக 29 சதவீதம், எரிசக்தி துறை 26 சதவீதம், தொழில்துறை 14 சதவீதம் என வாயுவை வெளியேற்றுகின்றன.
இந்தியாவில் அனல்மின் உற்பத்தி துறை 35 சதவீதம், தொழில்துறை 24 சதவீதம், வேளாண் துறை 19 சதவீதம் என உமிழ்வு நடக்கிறது.