தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் காட்டுத் தீ - சுற்றுச்சூழல், வன விலங்குகளுக்கு பாதிப்பு

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொளுவ பெட்டா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரங்கள்.

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொளுவ பெட்டா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரங்கள்.

Updated on
2 min read

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ பரவிய நிலையில், நேற்று முன்தினம் காலை தீ கட்டுக்குள் வந்தது. இதனால், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் 1,295 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இப்பகுதி காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலய எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வறண்ட இலையுதிர் மற்றும் பசுமை காடுகள், மூங்கில், தேன் மற்றும் அதிக புளி மகசூல் கிடைக்கும் பகுதியாக உள்ளது.

இப்பகுதியில் தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் திண்ணிகள், சிறுத்தைகள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகள் உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது.

தற்போது, கோடைக்கு முன்னரே வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் இங்குள்ள மரம் மற்றும் செடிகள் காய்ந்து சருகாகி வருகின்றன.

இந்நிலையில், மரக்கட்டா, தொளுவபெட்டா, திப்பசந்திரம், பேவநத்தம், பாளேகுளி, தல்சூர், அத்திகோட்டா ஆகிய வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ பரவியது. வனத்துறையினர் மூலம் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை குறிப்பிட்ட தீத்தடுப்பு பாதையைக் கடந்து தீ பரவாமல் கட்டுக்குள் வந்தது.

இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நேரங்களில் வனத்துறையினர் உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தி விடுவார்கள். இதனால் பெரிய சேதம் ஏற்படாது.

தற்போது, வனத்துறை ஊழியர்கள் பற்றாக்குறையால், வனப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரமாக இல்லை. இதனால் வனப்பகுதியில் நடைபெறும் வனக்குற்றங்களையும், காட்டுத்தீயையும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பல்லுயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள், அரிய வகை தாவரங்கள் தீயில் சேதம் அடைவதால், சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைத்து, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீத்தடுப்பு பாதையை மீறி விபத்து

வனத்துறையினர் கூறியதாவது: கோடைக் காலங்களில் வனப்பகுதியில் காட்டுத்தீ விபத்தை தடுக்க தீத்தடுப்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இது மனிதர்களால் ஏற்பட்டதா? அல்லது காய்ந்த மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீயா என்பது உடனடியாக கண்டறிய முடியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தீயால் வனவிலங்குகள் மற்றும் மரங்கள் எவ்வளவு சேதம் அடைந்துள்ளன என்பதையும் உடனடியாக கண்டறிய முடியவில்லை.

வனப்பகுதிக்கு செல்வோர் பற்றவைக்கப்பட்ட சிகரெட் துண்டுகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும். வனப்பகுதி அருகே குப்பைகளை தீ வைத்து எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். வனப்பகுதிக்கு தீ வைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுதொடர்பாக வனப்பகுதி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

<div class="paragraphs"><p>தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொளுவ பெட்டா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரங்கள்.</p></div>
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 டாலர்களை கடந்தது: மேற்காசிய போர்ச் சூழல் எதிரொலி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in