

வருசநாடு: தேனி மாவட்டம் வருசநாடு அருகே சேற்றில் சிக்கிய காட்டு மாட்டை வனத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் காட்டு மாடு சோர்வாக மயங்கி கிடந்ததால், அதற்கு சிகிச்சை அளித்து காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வருசநாடு அருகே யானை கெஜம் வனப் பகுதியில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், குடிநீர் தேடி காட்டெருமை ஒன்று வனப் பகுதியில் இருந்து வெளியே வந்துள்ளது. ஆற்றுக்காடு அருகே சேற்றில் சிக்கிய காட்டெருமை வெளியேற முடியாமல் போராடியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த வருசநாடு, கண்டமனூர் வனச்சரகர்கள் சுரேஷ், சிவாஜி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், பொக்லைன் மூலம் சேற்றில் சிக்கி போராடிய காட்டெருமையை வெளியேற்றி பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், “20 வயதுடைய காட்டு மாடு சேற்றில் சிக்கி இரண்டு நாட்களாக வெளியேற முடியாமல் போராடி வந்துள்ளது. இதனால் மிகவும் சோர்ந்து காணப்பட்டது. ஆகவே உரிய சிகிச்சை அளித்து வனப் பகுதிக்குள் விட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.
இதனிடையே, மீட்புப் பணியை தேனி உதவி வனப்பாதுகாவலர் சங்கரன் நேரில் ஆய்வு செய்தார்.