

பிரதிநித்துவப் படம்
செங்கல்பட்டு: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் சிறப்பாசிரியர்களை கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும் என்ற செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவுக்கு பகுதி நேர ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகளில் பணியாற்றும் இவர்கள், மீதமுள்ள நாட்களில் வாழ்வாதாரத்துக்காக பிற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக பகுதிநேர சிறப்பாசிரியர்களை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக நியமித்து, கட்டாயம் பணியில் ஈடுபட வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பகுதி நேர ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆற்றலரசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், ‘பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கூடுதல் அரசு பணிகளில் கட்டாயப்படுத்துவது நியாயமற்றது. இதனால் அவர்களுக்கு மனஉளைச்சலும் வாழ்வாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
பகுதிநேர ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும் என்றும், அதனை பின்பற்றாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த உத்தரவுக்கு பகுதிநேர ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் கூடுதல் அரசு பணிகளை கட்டாயப்படுத்துவது ஏற்க முடியாதது என சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மீது எந்தவித நிர்பந்தமும் செலுத்தாமல், அவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, உரிய சுற்றறிக்கை மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.