

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணையில் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை சேற்றில் சிக்கிக்கொண்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு நேற்று முன்தினம் இரவு தண்ணீர் குடிப்பதற்காக வந்த பெண் யானை, எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி கீழே விழுந்தது. சேற்றிலிருந்து வெளியேற முடியாமல் இரவு முழுவதும் தவித்தது.
நேற்று காலை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், சேற்றில் சிக்கியிருந்த யானையைக் கண்டனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை மீட்க முயன்றனர். ஆனால், அந்த இயந்திரமும் சேற்றில் சிக்கிக்கொண்டது.
இதற்கிடையே, யானை சோர்வாகக் காணப்பட்டதால், அதற்கு முதலுதவி அளிப்பதற்காக கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து, யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.