மீனவர் வலையில் சிக்கி அழியும் யானை திருக்கை மீன்கள்!

மீனவர் வலையில் சிக்கி அழியும் யானை திருக்கை மீன்கள்!
Updated on: 
1 min read

ராமேசுவரம்: வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2001-ம் ஆண்டு கடல்வாழ் உயிரினங்களான திமிங்கலம், டால்பின், கடல் பன்றி, கடல் பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் சங்குகள் உள்ளிட்ட 52 வகையான உயிரினங்களை பிடிப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த பட்டியலில் 16 வகையான சுறா மீன்கள், 6 வகையான உளுவை மீன்கள், பவளப்பாறை பகுதிகளில் வசிக்கும் சில மீனினங்களும் மற்றும் திருக்கை மீன்களில் யானை திருக்கை, முள்ளந் திருக்கை, குருவி திருக்கை, கதிர்வாள் திருக்கை, அடைதிரள் திருக்கை மீன்களும் சேர்க்கப்பட்டன.

மத்திய அரசால் முதன்முதலாக தடை செய்யப்பட்ட 52 வகையான கடல் வாழ் உயிரினங்கள் பற்றி மட்டுமே மீனவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்டதாக விழிப்புணர்வு உள்ளது. அவை மீனவர்களின் வலையில் சிக்கினால் மீண்டும் கடலில் விடப்படுகிறது.

ஆனால், தொடர்ந்து பின்னர் பல்வேறு காலநிலைகளில் தடை செய்யப்பட்ட மீனினங்கள், சங்குகள், பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவற்றை தொடர்ந்து மீனவர்கள் பிடிப்பதும், அவற்றை விற்பனை செய்வதும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. மேலும் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட மீன்களின் சமையல் குறிப்புகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக கடலோரப் பகுதிகளில் திருக்கை மீன் சீசன் தொடங்கி உள்ளது. யானை திருக்கை, முள்ளந்திருக்கை, குருவித் திருக்கை, சோனகத்திருக்கை, ஆடாத் திருக்கை, புலியன் திருக்கை, கருவா திருக்கை, பூவாத்திருக்கை, மணற் திருக்கை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட திருக்கை வகைகள் பெரும்பாலும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது.

இதில் அழியும் நிலையில் சிகப்பு பட்டியலில் உள்ள யானை திருக்கை மீன்களும் அடக்கம். யானை, திருக்கையின் உருவம் பெரியதாகவும், தோல் யானைப் போன்று இறுக்கமாக இருப்பதால் இதற்கு யானைத் திருக்கை என்ற பெயர் உண்டானது. இந்த திருக்கை 50 கிலோவிலிருந்து 2 ஆயிரம் கிலோ எடை வரையிலும் வளரக் கூடியது.

இது குறித்து கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கூறியது: தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு மீனவர்கள் மத்தியில் இல்லை. தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிப்பது, வியாபாரம் செய்வது 1972ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனையும், ரூபாய் இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் குறையாத அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கமுடியும்.

இது குறித்து வனத்துறையினர் மீனவர்களுக்கும், கடலோரப் பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

மீனவர் வலையில் சிக்கி அழியும் யானை திருக்கை மீன்கள்!
அரசு பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு

X