

ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சாஸ்தா கோயில் அணை நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் தேவதானம் சாஸ்தா கோயில் அணை வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் நகரியாற்றின் குறுக்கே சாஸ்தா கோயில் அணை உள்ளது. 33 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் தேவதானம் பெரியகுளம், நகரகுளம், வாண்டையார்குளம், சேர்வராயன் குளம் உள்ளிட்ட 11 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.
இக்கண்மாய்கள் மூலம் 2,679 ஏக்கர் விவசாய நிலங்களும், நேரடி கால்வாய் மூலம் 451 ஏக்கர் என மொத்தம் 3,130 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்த ஜனவரி மாதம் அணை நீர்மட்டம் 30 அடியாக இருந்தது. அதன்பின், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டு நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது.
தற்போது அணையில் முற்றிலும் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
கடந்த வாரம் பெய்த மழையில் சாஸ்தா கோயில் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்ட நிலையிலும், அணை வறண்டு உள்ளது. ஆடிப்பட்டத்தில் பயிறு வகைகள் சாகுபடி நடைபெறும் நிலையில், அணை முற்றிலும் வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.