“டெல்லி காற்று மாசு காரணமாக எனக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது” - நிதின் கட்கரி பேச்சு

“டெல்லி காற்று மாசு காரணமாக எனக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது” - நிதின் கட்கரி பேச்சு
Updated on
1 min read

புதுடெல்லி: “காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் மூன்று நாட்கள் மட்டுமே தங்கியிருந்தாலும் எனக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது” என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

டெல்லியில் மூத்த பத்திரிகையாளரும், முன்னாள் மத்திய தகவல் ஆணையருமான உதய் மஹூர்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "இன்று உண்மையான தேசபக்தி என்று ஒன்று இருக்குமானால், அது இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதில்தான் உள்ளது. நான் டெல்லியில் இரண்டு நாட்கள் மட்டுமே தங்குகிறேன். அதற்கே எனக்கு நோய்த் தொற்றுகள் வந்துவிடுகின்றன. டெல்லி ஏன் மாசுபாட்டால் இவ்வளவு அவதிப்படுகிறது?

நான்தான் போக்குவரத்துத் துறை அமைச்சர். ஆனால், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டுக்கு போக்குவரத்துதான் 40 சதவீதம் காரணமாக உள்ளது.

நாம் புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்ய ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இது என்ன வகையான தேசபக்தி? இவ்வளவு பணத்தைச் செலவழித்து, நாம் நம் சொந்த நாட்டையே மாசுபடுத்தி வருகிறோம். மாற்று எரிபொருட்கள் மற்றும் உயிரி எரிபொருட்களில் நம்மால் தற்சார்பு அடைய முடியாதா?

புதைபடிவ எரிபொருட்கள் நம்மிடம் குறைவாகவே உள்ளன, மாசுபாடும் அதிகரித்து வருகிறது. நம்மால் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியாதா? பூஜ்ஜிய மாசுபாட்டுக்கு வழிவகுக்கும் மின்சார வாகனங்களையும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களையும் நம்மால் ஏன் ஊக்குவிக்க முடியாது?” என்றார்.

வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவரான கட்கரி, டெல்லி காற்று மாசு குறித்துப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ஒரு நிகழ்வின்போது, ​​"ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு வரும்போது, ​​நான் போகலாமா வேண்டாமா என்று யோசிப்பேன். அவ்வளவு பயங்கரமான மாசுபாடு இருக்கிறது" என்று அவர் கூறியிருந்தார்.

“டெல்லி காற்று மாசு காரணமாக எனக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது” - நிதின் கட்கரி பேச்சு
“ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக போட்டி” - டிடிவி தினகரன் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in