

டிடிவி தினகரன்
ஆண்டிபட்டி: “ஆண்டிபட்டிதான் எங்களுக்கு புனித பூமி. ஆகவே, எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இந்த தொகுதியில்தான் நாங்கள் போட்டியிடுவோம். வேட்பாளரை பிறகு அறிவிப்போம்” என்று ஆண்டிபட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில் உள்ள அவரது சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூட்டணி தொடர்பாக ஊடகங்கள் வதந்தியை பரப்புவது வருத்தமளிக்கிறது. இது யார் மூலமாக பரப்பப்படுகிறது என்பதும் தெரியும். அவர்களுக்கும் சேர்த்துதான் அன்றே எங்கள் ஊர் வழக்கப்படி பதிலளித்தேன்.
முன்பிருந்ததை விட அமமுகவுக்கு வாக்கு வங்கி சதவீதம் உயர்ந்திருக்கிறது. கட்டமைப்பு வலுப்பெற்றிருக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் வெற்றி பெற்றோம்.
வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்துக்கு எது நல்லதோ, அந்த முடிவை எடுப்போம். அமமுகவை தவிர்த்து விட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. எந்தக் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுகதான். ஊடகங்கள் அல்ல.
குழந்தைக்கு இன்னும் வரனே அமையவில்லை, அதற்குள் பேரக் குழந்தைக்கு பெயர் வைப்பது போல உள்ளது கூட்டணி குறித்து ஊடகங்களில் வரும் செய்திகள். அமமுக பல சோதனைகள், நெருப்பாற்றுகளை கடந்து வந்துள்ளது. அமமுகவை முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தது உண்மை. ஆனால் தமிழ்நாட்டின் நலன் கருதியே எங்கள் கூட்டணி குறித்த முடிவு இருக்கும்.
எந்தக் கூட்டணிக்கு செல்கிறேன் என்பதை அறிவித்து விட்டுதான் செல்வோம். எங்களுக்காக யாரும் கூட்டணியை முடிவு செய்ய வேண்டாம். எங்களை ஏற்றுக் கொள்பவர்களை விட, நாங்கள் யாரை ஏற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம். தமிழக அரசியலில் கூட்டணி தொடர்பாக அமமுக எடுக்கும் முடிவு முக்கியமானதாக இருக்கும். அது வெற்றியை தீர்மானிப்பதாக அமையும். எங்களுக்கு உரிய மரியாதை மற்றும் கேட்கும் தொகுதிகளை தருபவர்கள் உடன்தான் கூட்டணி.
தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி முடிவுகளை அறிவிப்போம். வரும் தேர்தலில் அமமுக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குச் செல்வது உறுதி.
அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்தபோது, அவர் இறந்து விட்டார் என பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. அதனை முறியடித்து எம்ஜிஆரை வெற்றி பெற வைத்தவர்கள் ஆண்டிபட்டி மக்கள்தான். கிறிஸ்தவர்களுக்கு வாடிகன், இஸ்லாமியர்களுக்கு மெக்கா, இந்துக்களுக்கு காசி, ராமேஸ்வரம் என்று ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு புனித தலம் இருப்பது போல் எங்களுக்கு புனித பூமியாக திகழ்வது ஆண்டிபட்டிதான்.
ஆகவே நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும், ஆண்டிபட்டியில்தான் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். வேட்பாளர் யார் என்பதை பிறகு அறிவிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்பதும், 6 சீட் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் வதந்தியே” என்றார் டிடிவி தினகரன்.