தருமபுரி வத்தல்மலையில் எல்-நினோ தாக்கத்தால் காஃபி விளைச்சல் சரிவு

இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் காஃபி செடிகளில் குறைந்து காணப்படும் விளைச்சல்.

தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் காஃபி செடிகளில் குறைந்து காணப்படும் விளைச்சல்.

Updated on: 
1 min read

தருமபுரி: எல்-நினோ தாக்கத்தால் தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் காஃபி விளைச்சல் 50 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குளிர்ந்த தட்பவெப்ப நிலை கொண்ட மலைக்கிராமம் வத்தல்மலை.

இங்கு சின்னாங்காடு, குழியனூர், ஒன்றிக்காடு, பால்சிலம்பு, மண்ணாங்குழி, பெரியூர், நாயக்கனூர், கொட்லாங்காடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர்.

இங்குள்ள விவசாய நிலங்களில் கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள், அவரை, துவரை, காராமணி உள்ளிட்ட பருப்பு வகை பயிர்கள் மற்றும் கடுகு, எள் போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

பின்னர், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வை தொடர்ந்து வத்தல் மலையில் உள்ள 1,500 ஏக்கர் விளைநிலங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பில் மானாவாரியாக காஃபி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

காஃபி செடிகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ விடத் தொடங்கி அக்டோபர் இறுதி முதல் பிப்ரவரி வரை அறுவடை நடைபெறும். தற்போது காஃபி அறுவடை நடந்து வருகிறது. ஆனால், எல்-நினோ வறட்சி தாக்கத்தால் நடப்பு ஆண்டில் விளைச்சல் பாதியாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளதால் காஃபி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து வத்தல்மலையில் உள்ள பால்சிலம்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசுபதி கூறியதாவது: காஃபி சாகுபடியில் பூ விடும் பருவம் முதல் காய்கள் திரண்டு வரும் பருவம் வரையிலான மாதங்களில் பொருத்தமான மழைப்பொழிவும், ஈரப்பதமும் இருந்தால் ஒரு செடிக்கு 3 முதல் 5 கிலோ வரை காஃபி கொட்டைகள் கிடைக்கும்.

ஒரு ஏக்கரில் சுமார் ரூ.1.50 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். உரம் மற்றும் செலவினங்கள் போக ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் கோடை வறட்சி முடிந்து மழைப்பொழிவு தொடங்க வேண்டிய காலத்தில் எல்-நினோ தாக்கம் காரணமாக மழைப்பொழிவு இல்லை. அதன்பின்னரும் போதிய அளவில் மழையில்லை.

இதனால், பூ விடும் பருவத்திலேயே செடிகள் வாடி நின்றன. பெருமளவு பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன. செடிகளில் தப்பி நின்ற பிஞ்சுகளுக்கும் போதிய ஈரப்பதம் கிடைக்காததால் காய்கள் செழித்து வளரவில்லை. வழக்கத்தைவிட பாதியாக விளைச்சல் சரிந்துள்ளது.

இது காஃபி சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்த உள்ளது. எனவே, விளைச்சல் சரிவை கணக்கெடுப்பு நடத்தி அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் காஃபி செடிகளில் குறைந்து காணப்படும் விளைச்சல்.</p></div>
அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்தது குறித்து மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு உத்தரவு

X