

செங்கல்பட்டு மாவட்டம் முள்ளி குளத்தூர் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளப்பட்டுள்ளதா என்பதை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிகுளத்துதூரைச் சேர்ந்த விவசாயி டி.சவுந்தர ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கிமீ தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்க செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் தாலுகா முள்ளி குளத்தூர் ஏரியில் மண் அள்ள, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பிரதானமாக உள்ள இந்தக் ஏரியில் இருந்து மணல் அள்ள அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமானது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாய நீர் ஆதாரமும் பாதிக்கப்படும். தற்போது இந்த ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த ஏரியில் மணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, சம்பந்தப்பட்ட முள்ளி குளத்தூர் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மணல் அள்ளப்படுகிறதா என் பதை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் நிபுணர் ஒருவரை நியமித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும், என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 20ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.